இந்திய அணி தற்போது மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டாக திகழ்கிறது. தற்போதைய சூழலில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டாக இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் திகழ்கிறது. 

பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் என அனைத்து வகையான ஃபாஸ்ட் பவுலர்களும் இந்திய அணியில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இவர்கள் அசத்திவருகின்றனர். 

இந்திய அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலரான இஷாந்த் சர்மா, நீண்ட இடைவெளிக்கு பிறகு, வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில்தான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா இதற்கிடைப்பட்ட காலத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும், இந்திய ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்துவருகிறார். 

இஷாந்த் சர்மா இந்திய அணிக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 292 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஃபாஸ்ட் பவுலர் என்ற பெருமையையும் இஷாந்த் பெற்றுள்ளார். விரைவில் அவர் 100 டெஸ்ட் போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டவுள்ளார். 

இந்நிலையில், தனது பவுலிங்கில் இருந்த சிக்கலுக்கு தீர்வு கண்ட பயிற்சியாளர் யார் என்று தெரிவித்துள்ளார் இஷாந்த் சர்மா. இதுகுறித்து பேசியுள்ள இஷாந்த் சர்மா, இந்தியாவில் என்ன பிரச்னை என்றால், அனைவரும் தவறுகளை சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் யாருமே பிரச்னைக்கு தீர்வு சொல்லமாட்டார்கள். தீர்வு சொல்லக்கூடியவர்கள் தான் நல்ல பயிற்சியாளர்களாக இருக்க முடியும். ஒருசிலர் மட்டுமே அப்படிப்பட்ட பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். எனது பவுலிங் சிக்கல்கள் சிலவற்றிற்கு ஜாகீர் கான் தீர்வு கொடுத்துள்ளார். 

அதேபோல, நான் வீசும் ஃபுல் லெந்த் டெலிவரிகளை இன்னும் வேகமாக வீச வேண்டும் என்று பலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் அதை எப்படி வீச வேண்டும் என்று யாருமே சொன்னதில்லை. கவுண்டி கிரிக்கெட்டில் ஆடியபோது, ஜேசன் கில்லெஸ்பி(ஆஸ்திரேலியா) எனது அந்த பிரச்னைக்கு தீர்வு சொன்னார். ஃபுல் லெந்த் டெலிவரிகளை வீசும்போது சும்மா வீசினால் மட்டும்போதாது. பந்தின் தையல் நன்றாக பிட்ச்சில் படுமாறு அழுத்தி வீச வேண்டும். அப்படி வீசினால்தான் பந்து பிட்ச் ஆனபிறகு, பேட்ஸ்மேனின் முழங்காலை நோக்கி வேகமாக சீறும் என்று சொன்னார். அவரது அந்த ஆலோசனைக்கு பின் எனது ஃபுல் லெந்த் டெலிவரிகள் நல்ல வேகத்தில் சென்றன. ஃபுல் லெந்த் டெலிவரிகளை வேகமாக வீசும் எனது திறன் மேம்பட்டது. பந்து எந்த இடத்தில் பிட்ச் ஆகிறது என்பதைவிட, எந்த இடத்தை நோக்கி சென்று, எங்கு முடிகிறது என்பதுதான் முக்கியம் என்பதை தெரிந்துகொண்டேன் என்று இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.