இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஹனுமா விஹாரியின் அபார சதம் மற்றும் விராட் கோலி, மயன்க் அகர்வால், இஷாந்த் சர்மா ஆகியோரின் பொறுப்பான அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட்  இண்டீஸ் அணி, இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்து, மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பாகவே, 117 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

299 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் அடித்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்திய அணி மொத்தமாக 467 ரன்கள் முன்னிலை பெற்றதால் 468 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் அடித்துள்ளது. 

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா, இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், அதில் ஒரு விக்கெட்டை அவரே வீழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் ஹாமில்டனின் விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த் சர்மா, கபில் தேவின் டெஸ்ட் சாதனை ஒன்றை முறியடித்து முதலிடத்தை பிடித்தார். 

ஹாமில்டனின் விக்கெட், ஆசியாவிற்கு வெளியே இஷாந்த் சர்மா வீழ்த்திய 156வது விக்கெட். இதன்மூலம் ஆசியாவிற்கு வெளியே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கபில் தேவின்(155 விக்கெட்டுகள்) சாதனையை முறியடித்துள்ளார் இஷாந்த் சர்மா.