அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்
வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன் என்று இஷான் கிஷன் கூறியுள்ளார்.
இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று வங்கதேச அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி, இஷான் கிஷனின் இரட்டை சதம்(210) மற்றும் விராட் கோலியின் அபார சதத்தால்(113) 50 ஓவரில் 409 ரன்களை குவித்து, 182 ரன்களுக்கு வங்கதேசத்தை சுருட்டி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆடாததால், ஷிகர் தவானுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்கினார். தொடக்கம் முதலே அதிரடியாக பேட்டிங் ஆடி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்தார் இஷான் கிஷன். அதன்பின்னர் வங்கதேச பவுலிங்கை அடித்து நொறுக்கி சிக்ஸர் மழை பொழிந்த இஷான் கிஷன், தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி வரலாற்று சாதனை படைத்தார்.
126 பந்தில் இரட்டை சதமடித்து, அதிவேக இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். கெய்ல் 138 பந்தில் இரட்டை சதமடித்திருந்த நிலையில், அவரது சாதனையை முறியடித்தார். மேலும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர், வங்கதேசத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் ஆகிய சாதனைகளையும் படைத்தார்.
131 பந்தில் 210 ரன்கள் அடித்து இன்னிங்ஸின் 36வது ஓவரில் ஆட்டமிழந்தார். இன்னும் 14 ஓவர்கள் எஞ்சியிருந்ததால், அதில் 35-40 பந்துகளை எதிர்கொண்டிருந்தால் அவர் முச்சதம் அடித்திருக்கக்கூட வாய்ப்பிருந்தது. அப்படி அடித்திருந்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கலாம். ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை தகர்க்கவும் வாய்ப்பிருந்தது. ஆனால் 36வது ஓவரில் இஷான் கிஷன் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்து அந்த அருமையான வாய்ப்பை தவறவிட்டார்.
அதைத்தான் அவரும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய இஷான் கிஷன், நான் 36வது ஓவரில் ஆட்டமிழந்தேன். இன்னும் 14.1 ஓவர் எஞ்சியிருந்தது. எனவே முழுமையாக ஆடியிருந்தால் முச்சதம் அடித்திருப்பேன். இரட்டை சதமடித்த ஜாம்பவான் வீரர்கள் பட்டியலில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. பிட்ச் பேட்டிங் ஆட நன்றாக இருந்ததால், 95 ரன்னில் இருந்தபோது சிக்ஸர் அடித்து சதத்தை எட்டலாம் என்று நினைத்தேன். ஆனால், இது எனது முதல் சதம் என்பதால் அவசரப்படாமல் நிதானமாக ஆடி சதத்தை எட்டுமாறு கோலி அறிவுறுத்தினார். அதை ஏற்று நிதானமாக ஆடி சதமடித்தேன் என்றார் இஷான் கிஷன்.