Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 இஷான் கிஷன் - சூர்யகுமார் யாதவ் காட்டடி பேட்டிங்..! 235 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ்

 இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவின் காட்டடி பேட்டிங்கால் 20 ஓவரில் 235 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ்  அணி, கடினமான இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அந்த அணியை 64 ரன்களுக்கு சுருட்டினால் பிளே ஆஃபிற்கு முன்னேற முடியும்.

ishan kishan and suryakumar yadav amazing batting help mumbai indians to set tough target to srh  in ipl 2021
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Oct 8, 2021, 9:45 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் 4வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேற கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்துவரும் நிலையில், கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற கேகேஆர் அணி +0.587 நெட் ரன்ரேட்டுடன் 4ம் இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்த நிலையில், கேகேஆரை பின்னுக்குத்தள்ளி மும்பை அணி பிளே ஆஃபிற்கு முன்னேற வேண்டுமென்றால் சன்ரைசர்ஸை 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்.

மிகப்பெரிய வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, அதையும் செய்துதான் பார்த்துவிடுவோமே.. என்கிற வகையில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வெற்றி வித்தியாசமே 171 ரன்களாக இருக்க வேண்டுமென்றால், மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும். இதையும் முயன்றுதான் பார்த்துவிடுவோமே என்ற எண்ணத்தில் களமிறங்கிய மும்பை அணியின் நிர்வாகம் அனைத்து வீரர்களுக்கும் முழு சுதந்திரம் அளித்தது என்பதை இஷான் கிஷனின் பேட்டிங் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.

முதல் பந்து முதலே அடித்து ஆட ஆரம்பித்தார் இஷான் கிஷன். பவுலர்கள் போடும் பந்துகள் அனைத்தையும் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் அனுப்பினார் இஷான் கிஷன். இஷானின் அதிரடியை கண்ட ரோஹித் சர்மா, அவருக்கு சிங்கிள் எடுத்து கொடுத்தார். 2வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை விளாசிய இஷான் கிஷன், ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கோ சிக்ஸருக்கோ அனுப்ப, 16 பந்தில் அரைசதம் அடித்தார். இது ஐபிஎல்லில் அதிவேக 3வது அரைசதம்.

ரோஹித் சர்மா பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இஷான் கிஷனின் காட்டடி பேட்டிங்கால் 6 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் அடித்திருந்த மும்பை அணியின் ரன் வேகம், ரோஹித் சர்மாவின் விக்கெட்டுக்கு பிறகு குறைந்தது. ஹர்திக் பாண்டியா 8 பந்தில் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

9வது மற்றும் 10வது ஓவர்களில் பேட்டிங் ஆட பந்து பெரியளவில் கிடைக்காததையடுத்து, 10வது ஓவரின் 4வது பந்தில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். 32 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 84 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் பொல்லார்டு(13), நீஷம்(0), க்ருணல் பாண்டியா(9) என ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய சூர்யகுமார் யாதவ் 40 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 82 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 235 ரன்களை குவித்தது மும்பை அணி.

236 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ள நிலையில், 65 ரன்களுக்குள்ளாக சன்ரைசர்ஸை சுருட்டினால் மும்பை அணி பிளே ஆஃபிற்கு முன்னேறமுடியும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios