உலக கோப்பையில் அரையிறுதியில் தோற்று இந்திய அணி வெளியேறிய நிலையில், அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஆடவுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. 

உலக கோப்பை தொடரில் வாங்கிய அடிக்கு பிறகு, இந்திய அணியின் சிக்கல்களை கலைந்து வலுவான அணியாக கட்டமைக்கும் தீவிரத்தில் அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.

தோனி ஓய்வு குறித்து வாய் திறக்காத நிலையிலும், அவருக்கு இனிமேல் அணியில் பெரும்பாலும் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். தோனி ஓய்வு அறிவிக்கவில்லை என்றாலும் ஓரங்கட்டப்படுவார் என்பதில் சந்தேகமேயில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தான் ஆடவில்லை என்பதை தோனி உறுதிப்படுத்திவிட்டார். 

அதனால் டி20, டெஸ்ட், ஒருநாள் என மூன்றுவிதமான அணிகளுக்கும் முதன்மை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான். ஆனால் அதேநேரத்தில் மாற்று விக்கெட் கீப்பர்களும் எடுக்கப்படுவர். ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அணிகளில் இஷான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவர் மாற்று விக்கெட் கீப்பராக அணியில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இஷான் கிஷானுக்கான வாய்ப்புதான் அதிகம். 

அதேபோல டெஸ்ட் அணியின் மாற்று விக்கெட் கீப்பராக ரித்திமான் சஹா எடுக்கப்படுவார்.