உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. 

நீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கர் எடுக்கப்பட்டதுகூட எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டது அதிர்ச்சிகரமான தேர்வுதான். 

ஏனெனில் ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பண்ட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி, அதன்மூலம் ஒருநாள் அணியிலும் இடம்பிடித்த ரிஷப் பண்ட், உலக கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்துவிட்டதாகவே பலரும் பார்த்தனர். வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரிலும் ரிஷப் பண்ட் தான் அணியில் இடம்பிடித்திருந்தார்.

தினேஷ் கார்த்திக் டி20 போட்டிகளுக்கு மட்டுமே எடுக்கப்பட்டதால் அவரை டி20 வீரராக மட்டுமே தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் பார்ப்பதாக ஒரு தோற்றம் இருந்தது. அதனால் ரிஷப் பண்ட்டுக்கான வாய்ப்பே இருப்பதாக தெரிந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட்டை ஓரங்கட்டிவிட்டு தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்பட்டார். ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதால் அவரை அணியில் எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார். 

இந்நிலையில், ரிஷப் பண்ட்டை எடுக்கத்தான் தேர்வுக்குழு ஆர்வம் காட்டியதாகவும், ஆனால் கேப்டன் கோலியின் ஆலோசனையின் படிதான் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டதாகவும் ஒரு தகவல் பரவிவருகிறது. அணி தேர்வு குறித்த தனது கருத்தை கேப்டன் தெரிவிப்பதில் தவறேதும் இல்லை. 

எனினும் விராட் கோலியின் ஆதரவுதான் தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்பட காரணம் என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ரிஷப் பண்ட் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்புகிறார். அதேநேரத்தில் அனுபவ விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் அணியில் இருப்பது நல்லது என்று கருதியிருக்கலாம். ஏனென்றால் தோனி ஆடாத பட்சத்தில்தான் மாற்று விக்கெட் கீப்பர் ஆடுவார். அப்படியிருக்கையில், தோனியின் இடத்தை பூர்த்தி செய்யும் வீரராக இருக்க வேண்டும் என்பதால், அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக்கிற்கு கோலி ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்திய அணியின் கேப்டன் கோலியாக இருந்தாலும் இக்கட்டான சூழலில் ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு பவுலர்களுக்கு ஆலோசனை வழங்குவது, ஃபீல்டிங் செட் செய்வது போன்ற பணிகளை தோனி செய்வது, கோலியின் வேலையை எளிதாக்குகிறது. அந்த வகையில், தோனி ஆடாத போட்டிகளில் அப்படியான ஆலோசனைகளை வழங்கும் அனுபவமும் திறனும் உடைய விக்கெட் கீப்பர் அணியில் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், யார் தேர்வு செய்திருந்தாலும் சரி, ஆனால் தினேஷ் கார்த்திக்கின் தேர்வு சரிதான்.