இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளை தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. கடந்த முறை தான், இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. 

கடந்த முறை வார்னர் மற்றும் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியில் ஆடவில்லை. அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்த முறை அவர்கள் ஆடுவதால் சமபலம் வாய்ந்த அணிகளுக்கு இடையேயான கடும் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார். இது ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல  விஷயமாக அமையும். 

இரு அணிகளும் பவுலிங்கை பொறுத்தமட்டில் சமபலம் வாய்ந்த அணிகள் தான். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் மிரட்டுமளவிற்கு இரு அணிகளுமே மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களை கொண்டுள்ளது. இந்திய அணியில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோரும், ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் ஆகியோரும் உள்ளனர்.

இரு அணிகளுமே மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களை பெற்றிருந்தாலும், இடது கை ஃபாஸ்ட் பவுலரான மிட்செல் ஸ்டார்க் இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு சற்று கூடுதல் பலமாக இருக்கும் என இர்ஃபான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இர்ஃபான் பதான், இரு அணிகளும் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றுள்ளன. இந்திய அணி டாப் குவாலிட்டியான உலகத்தரம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலர்களை பெற்றுள்ளது. ஆனால், இடது கை ஃபாஸ்ட் பவுலரான மிட்செல் ஸ்டார்க்கை பெற்றிருப்பது ஆஸ்திரேலிய கண்டிஷனில் அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமையும். இடது கை ஃபாஸ்ட் பவுலர் வெரைட்டியை வழங்குவார். மேலும் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு, ஸ்டார்க்கின் ஆங்கிள் எதிர்கொள்ள மிகவும் கடினமாக இருக்கும். இது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமான விஷயம் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.