இந்திய அணியின் வெற்றிகரமான தொடக்க ஜோடியாக ரோஹித் சர்மா - தவான் ஜோடி திகழ்கிறது. சச்சின் - கங்குலி, சச்சின் - சேவாக் தொடக்க ஜோடிக்கு பிறகு இந்திய அணியின் வெற்றிகரமாக தொடக்க ஜோடியாக ரோஹித் - தவான் ஜோடி திகழ்ந்துவருகிறது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த மற்றும் மிரட்டலான தொடக்க ஜோடியாக திகழ்கிறது. 

ரோஹித் - தவான் இருவரும் பல தொடக்க ஜோடி சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகின்றனர். 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தான் ரோஹித்தும் தவானும் முதல் முறையாக தொடக்க ஜோடியாக களமிறங்கினர். அதன்பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக வெற்றிகரமான தொடக்க ஜோடியாக திகழ்ந்துவருகின்றனர். 

ரோஹித்தும் தவானும் இணைந்து ஒருநாள் கிரிக்கெட்டில் 4802 ரன்களை குவித்துள்ளனர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த நான்காவது ஜோடியாக ரோஹித் - தவான் ஜோடி உள்ளது. 

ரோஹித் - தவான் தொடக்க ஜோடி வெற்றிகரமாக திகழும் நிலையில், அவர்கள் சிறந்து விளங்க காரணம் என்னவென்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசினார் இர்ஃபான் பதான். 

ரோஹித் - தவான் குறித்து பேசிய இர்ஃபான் பதான், தவான் தொடக்கம் முதலே ரொம்ப ஃப்ரீயாக ஆடுவார் என்பது நமக்கு தெரியும். ஆனால் ரோஹித் சர்மா களத்தில் நிலைப்பதற்கு நேரம் எடுத்து ஆடும் வீரர். களத்தில் நிலைத்துவிட்டால், அதன்பின்னர் ரோஹித் சர்மா என்ன செய்வார் என்பது நமக்கு தெரியும். ரோஹித் களத்தில் நிலைப்பதற்கான நேரத்தை தவான் கொடுப்பார். தவான் ஆரம்பம் முதலே அடித்து ஆடுவதால், ரோஹித்தின் மந்தமான தொடக்கம் அணியை பாதிக்காத அளவிற்கு ஸ்கோர் இருக்கும். அதற்கு தவான் விரைவில் ரன் சேர்ப்பதுதான் காரணம்.

அப்படியாக, அவர்கள் இருவரும் பரஸ்பரம் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்தவர்கள் என்பதால், அதற்கேற்ப திட்டமிட்டு அருமையாக ஆடுகின்றனர். ரோஹித் ஆரம்பத்தில் நேரம் எடுத்துக்கொள்வார் என்பதை அறிந்த தவான், அதற்கேற்ப அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்வார். ரோஹித் களத்தில் நிலைத்த பின்னர், அவர் பார்த்துக்கொள்வார். ரோஹித் களத்தில் செட்டில் ஆகிவிட்டார் என்றால், அதற்கு பின்னர் ஸ்பின்னர்களை முழுமையாக அவரே கவனித்துக்கொள்வார். தவான் மீதான அழுத்தத்தை குறைக்கும்வகையில், ஸ்பின்னர்களை ரோஹித் எதிர்கொண்டு ஆடுவார். இருவருக்கும் இடையேயான புரிதல் தான் அவர்கள் சிறந்து விளங்க காரணம் என்று இர்ஃபான் பதான் தெரிவித்தார்.