டி20 உலக கோப்பை: இந்திய அணியை கிண்டலடித்த பாகிஸ்தான் பிரதமருக்கு இர்ஃபான் பதான் தக்க பதிலடி
டி20 உலக கோப்பை அரையிறுதியுடன் வெளியேறிய இந்திய அணியை கிண்டலடிக்கும் விதமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃபுக்கு இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் முன்னேறிய நிலையில், அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்தும் ஃபைனலுக்கு முன்னேறின. இன்று மெல்பர்னில் ஃபைனல் மேட்ச் நடந்துவருகிறது.
டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. இங்கிலாந்தின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்ற விதம் தான் வருத்தத்திற்குரியதாக அமைந்தது.
நியூசிலாந்துக்கு எதிரான மற்றொரு அரையிறுதி போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 153 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை குவித்தனர். அதனால் அந்த அணி எளிதில் வெற்றி பெற்றது.
முதலில் இந்த சீனியர் வீரர்களை தூக்கி போடுங்க.. அப்பதான் டீம் விளங்கும்..! சேவாக் அதிரடி
டி20 உலக கோப்பை ஃபைனல் குறித்து டுவீட் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், ”ஞாயிற்றுக்கிழமை 152/0 vs 170/0 மோதவுள்ளன” என்று இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் அடித்ததை சுட்டிக்காட்டி இந்திய அணியை கிண்டலடிக்கும் விதமாக டுவீட் செய்திருந்தார்.
அதற்கு தக்க பதிலடி கொடுத்த இர்ஃபான் பதான், உங்களுக்கும் (பாகிஸ்தான்) எங்களுக்குமான வித்தியாசம் இதுதான். நாங்கள் எங்கள் நிலையில் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் நீங்கள் மற்றவர்களின் கஷ்டங்களில் மகிழ்ச்சியை தேடுகிறீர்கள். அதனால் தான் உங்கள் சொந்த நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த தவறுகிறீர்கள் என்று இர்ஃபான் பதான் பதிலடி கொடுத்தார்.