Asianet News TamilAsianet News Tamil

#IREvsZIM கெவின் ஓ பிரயன் அதிரடி அரைசதம்.. ஜிம்பாப்வேவை அசால்ட்டா வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் கெவின் ஓ பிரயனின் அதிரடி அரைசதத்தால் 19வது ஓவரிலேயே 153 ரன்கள் என்ற இலக்கை அடித்து அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.
 

ireland beat zimbabwe by 7 wickets in second t20
Author
Dublin, First Published Aug 29, 2021, 7:53 PM IST

ஜிம்பாப்வே அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. 2வது போட்டி இன்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி, 10 ஓவரில் 64 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மில்டன் ஷும்பா  மற்றும் ரியான் பர்ல் ஆகிய இருவரும் பொறுப்புடன் விக்கெட்டை இழந்துவிடாமல் கவனமாக ஆடிய அதேவேளையில், அடித்தும் ஆடினர். ஷும்பா - பர்ல் ஆகிய இருவருமே அடித்து ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்தினர்.

ஷும்பா 27 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களையும், பர்ல் 33 பந்தில் 37 ரன்களையும் அடிக்க, 20 ஓவரில் 152 ரன்களை அடித்து 153 ரன்கள் என்ற சவாலான இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்தது ஜிம்பாப்வே அணி.

இதையடுத்து 153 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் கெவின் ஓ பிரயன் மற்றும் பால் ஸ்டர்லிங் ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 59 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பால் ஸ்டர்லிங் 37 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் பால்பிர்னி வெறும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மற்றொரு சீனியர் தொடக்க வீரரான கெவின் ஓ பிரயன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய கெவின் 41 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும்  ஒரு சிக்ஸருடன் 60 ரன்களை குவித்தார். அதன்பின்னர் ஜார்ஜ் டாக்ரெலும் அடித்து ஆடி 33 ரன்களை விளாசி 19வது ஓவரிலேயே அயர்லாந்து அணி வெற்றி இலக்கை எட்ட உதவினார். 

இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios