கொரோனா அச்சுறுத்தலால் 4 மாதங்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டியும் நடக்காமல் இருந்த நிலையில், கடந்த 8ம் தேதி மீண்டும் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்பட்டுவருகிறது. 

மீண்டும் கிரிக்கெட் தொடர் தொடங்கியிருப்பது கிரிக்கெட் உலகிற்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாகவும் நல்ல சமிக்ஞையாகவும் அமைந்துள்ளது. எனவே ஐபிஎல் எப்போது நடக்கும் என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் தொடர், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 18ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தள்ளிப்போக வாய்ப்புள்ளதால், செப்டம்பர் இறுதியிலிருந்து நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால் டி20 உலக கோப்பை ஒத்திவைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐசிசி வெளியிடாவிட்டாலும், டி20 உலக கோப்பை ஒத்திப்போவது உறுதிதான் என்றும், சரியான நேரத்தில் ஐசிசி அறிவிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

எனவே ஐபிஎல் செப்டம்பர் - நவம்பர் காலத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் நடக்காமல் இந்த ஆண்டு முடியாது என பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதற்கிடையே, ஐபிஎல்லை நடத்த இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள், தங்கள் நாட்டில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ-யிடம் அனுமதி கோரியுள்ளனர். 

இப்போதுள்ள சூழ்நிலையில், ஐபிஎல் கண்டிப்பாக ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படுவதற்குத்தான் வாய்ப்புள்ளது. அந்தவகையில், ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்பட்டாலும் பரவாயில்லை. ஐபிஎல் போட்டிகளை காண பார்வையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஸ்டேடியங்கள் நிறைகின்றன. ஆனாலும் தொலைக்காட்சி வாயிலாக பார்ப்பவர்களுக்காகத்தான் ஐபிஎல். அந்தவகையில், பார்வையாளர்கள் இல்லாமல் நடந்தாலும் பரவாயில்லை என்று ஒரு ஐபிஎல் அணியின் உரிமையாளர் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல்லை 2014ல் நடத்திய அனுபவம் கொண்ட யுஏஇ. ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய இடங்களில் கிரிக்கெட் ஸ்டேடியங்கள் உள்ளன. பயண நேரமும் குறைவு என்பதால் அங்கு பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.