IPL Mini Auction 2023: மினி ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 3 வீரர்கள்..!
ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி ஏலத்தில் கண்டிப்பாக எடுக்க வாய்ப்புள்ள 2 வீரர்கள் யார் யாரென்று பார்ப்போம்.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், 16வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்ததால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது. வரும் 23ம் தேதி கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடக்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர்.
அதில் சிஎஸ்கே அணி கண்டிப்பாக எடுப்பதற்கு டார்கெட் செய்யும் 3 வீரர்களை பார்ப்போம்.
சிஎஸ்கே அணி விடுவித்த வீரர்கள் - ட்வைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிஃப், நாராயண் ஜெகதீசன்.
தக்கவைத்த வீரர்கள் - தோனி, டெவான் கான்வே, மொயின் அலி, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, அம்பாதி ராயுடு, மஹீஷ் தீக்ஷனா, ட்வைன் பிரிட்டோரியஸ், சேனாபதி, மிட்செல் சாண்ட்னெர், மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், முகேஷ் சௌத்ரி, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், சிமர்ஜீத் சிங்.
கையிருப்பு தொகை - ரூ.20.45 கோடி
சிஎஸ்கே அணி எடுக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள்:
1. சாம் கரன் (இங்கிலாந்து)
சாம் கரன் ஏற்கனவே சிஎஸ்கே அணியில் ஆடியிருக்கிறார். சிறந்த ஆல்ரவுண்டரான சாம் கரன், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை செய்து, 2021ல் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது அந்த அணியில் முக்கிய அங்கம் வகித்தார். சிஎஸ்கே அணியில் ஏற்கனவே மிக கச்சிதமாக பொருந்தியவர் சாம் கரன்.
ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையை இங்கிலாந்து வெல்ல சாம் கரன் முக்கிய காரணமாக திகழ்ந்தார். டி20 உலக கோப்பையின் தொடர் நாயகன் விருதையும் வென்றார் சாம் கரன். இந்த ஆண்டில் சாம் கரன் ஆடிய 36 டி20 போட்டிகளி 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 495 ரன்களும் அடித்துள்ளார். அபாரமான டெத் பவுலிங், அதிரடி பேட்டிங் என டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய மேட்ச் வின்னராக திகழும் தங்களது பழைய வீரரான சாம் கரனை எடுக்கும் முனைப்பில் சிஎஸ்கே அணி உள்ளது.
2. ரைலீ ரூசோ (தென்னாப்பிரிக்கா)
தென்னாப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் ரைலீ ரூசோ இந்த ஆண்டில் அபாரமாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக ரைலீ ரூசோ அபாரமாக ஆடி சதமடித்திருக்கிறார். டி20 உலக கோப்பையிலும் மிகச்சிறப்பாக ஆடினார். ரைலீ ரூசோ 42 டி20 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் உட்பட 1340 ரன்கள் அடித்துள்ளார். ரைலீ ரூசோ சிஎஸ்கே அணி செட்டப்பிற்கு ஏற்றவர் என்பதால் கண்டிப்பாக அவரை சிஎஸ்கே அணி எடுக்கும்.
ICC WTC புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. ஃபைனலுக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பு
3. நாராயண் ஜெகதீசன் (இந்தியா)
சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த தமிழ்நாடு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் நாராயண் ஜெகதீசன், தோனிக்கு அடுத்த இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்டவர். ஆனால் அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்காமலேயே அவரை விடுவித்தது சிஎஸ்கே அணி. ஜெகதீசன் உள்நாட்டு தொடர்களான விஜய் ஹசாரே, ரஞ்சி தொடரில் அபாரமாக ஆடிவருகிறார். உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரில் அபாரமாக ஆடி ஒரு இரட்டை சதம் உட்பட தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசி சாதனை படைத்தார். ரஞ்சி தொடரின் முதல் போட்டியிலும் அதிரடியாக பேட்டிங் ஆடினார். கடந்த 2-3 மாதங்களில் நாராயண் ஜெகதீசன் அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார். எனவே அவரை மீண்டும் அணி செட்டப்பில் கொண்டுவர சிஎஸ்கே முயற்சிக்கும்.