ஐபிஎல்லில் நோ பால்களை கண்காணிப்பதற்காக மட்டுமே பிரத்யேகமாக ஒரு டிவி அம்பயர் நியமிக்கப்படவுள்ளார். 

ஐபிஎல்லில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த சீசனில் அம்பயரிங் படுமோசமாக இருந்தது. பலமுறை ஆட்டத்தின் பரபரப்பான சூழலில் நோ பால்கள் வழங்கப்படாதது கடும் சர்ச்சைக்குள்ளானது. அம்பயர்களின் கவனக்குறைவால் நடந்த அந்த தவறுகளால் சில போட்டிகளின் முடிவே மாறியது. 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் கடைசி பந்தை மலிங்கா நோ பாலாக வீசினார். ஆனால் அம்பயர் அதற்கு நோ பால் கொடுக்காததால் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. ஒருவேளை அம்பயர் சரியாக நோ பால் கொடுத்திருந்தால், அந்த போட்டியின் முடிவு மாறியிருக்கக்கூடும். 

அதனால் கடும் அதிருப்தியடைந்த ஆர்சிபி கேப்டன் கோலி, இது கிளப் லெவல் போட்டியல்ல.. ஐபிஎல். எனவே அம்பயர்கள் தங்களது கண்களை நன்றாக திறந்துவைத்து பார்த்து சரியாக செயல்பட வேண்டும் என்று காட்டமாக தெரிவித்தார். 

விராட் கோலியின் கோபம் நியாயமானதுதான். ஏனெனில் அப்பட்டமாக தெரியக்கூடிய மிகப்பெரிய நோ பாலுக்கே அம்பயர் நோ பால் கொடுக்கவில்லை என்றால் எப்படி? அதுவும் ஆட்டத்தின் பரபரப்பான கடைசி பந்து அது. இதுபோன்ற பல சம்பவங்கள் கடந்த ஐபிஎல் சீசனில் அரங்கேறின. 

இந்நிலையில், அதுபோன்ற தவறுகளையும் சர்ச்சைகளையும் களையும் விதமாக அடுத்த சீசனில் நோ பால்களை கண்காணிப்பதற்கென்றே தனியாக ஒரு டிவி அம்பயர் நியமிக்கப்படவுள்ளார். இதுகுறித்து நேற்று நடந்த ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் மீட்டிங்கில் விவாதிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐபிஎல் சீசனில் அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக, சைய்த் முஷ்டாக் அலி தொடரில் இந்த முறை பரிசோதிக்கப்படவுள்ளது.