கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் ஐபிஎல் 14வது சீசன் எந்த பிரச்னையும் இல்லாமல் நடத்தப்பட்டுவந்த நிலையில், அடுத்தடுத்து வீரர்கள் பலருக்கு கொரோனா உறுதியானதால் ஐபிஎல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல்லில் ஆடும் கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என அனைவருமே கொரோனா பயோ பபுளில் இருந்த நிலையிலும், சில பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் ஷர்மா, சிஎஸ்கே அணியை சேர்ந்த வீரர்கள் அல்லாது மூவர், டெல்லி வீரர் அமித் மிஷ்ரா, சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாக, ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டது.

ஐபிஎல் நடந்துகொண்டிருந்தபோதே, கொரோனா பயோ பபுளை தாங்க முடியாமல் ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்ஸன், ஆண்ட்ரூ டை ஆகிய ஆஸ்திரேலிய வீரர்களும், இங்கிலாந்து வீரரான லிவிங்ஸ்டோன் ஆகியோரும் ஐபிஎல்லில் இருந்து விலகி அவரவர் சொந்த நாட்டிற்கு திரும்பினர்.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிதீவிரமாக இருப்பதையடுத்து, இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குள் வருவதற்கு தடை விதித்த அந்நாட்டு அரசு, அது ஆஸ்திரேலியர்களாகவே இருந்தாலும், 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மிகக்கடுமையான உத்தரவை இட்டது. 

அதனால் ஐபிஎல்லுக்காக இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலியர்கள் அதிருப்தியடைந்தனர். கொரோனா அச்சுறுத்தலையடுத்து ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில், வெளிநாட்டு வீரர்களை அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

பிரிஜேஷ் படேல் கூறியதை கேட்டு, எப்படியும் பிசிசிஐயும் ஐபிஎல் நிர்வாகமும் தங்களை தங்கள் நாட்டிற்கு அனுப்பிவைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளனர் வெளிநாட்டு வீரர்கள்.