மும்பை அணி ராஜஸ்தானுக்கு எதிராக 217/2 ரன்கள் குவித்தது. ரோஹித் (53), ரியான் (61), ஹர்திக் (48*), சூர்யகுமார் (48*) அதிரடி காட்டினர். ரோஹித் சீசனின் மூன்றாவது அரைசதம் அடித்தார். ரியான், ஹர்திக், சூர்யகுமார் அதிரடி ரன் குவிப்பில் மும்பை ராஜஸ்தானுக்கு கடின இலக்கை நிர்ணயித்தது.
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 217 ரன்கள் குவித்துள்ளது.
ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் 11.5 ஓவர்களில் 116 ரன்கள் சேர்த்தனர். ரியான் ரிக்கல்டன் 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 61 ரன்கள் குவித்தார். மறுபுறம், ரோஹித் 18வது சீசனில் தனது மூன்றாவது அரைசதத்தை பதிவு செய்தார். அவர் 36 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் குவித்தார்.
அதிரடி பேட்டிங்:
தொடக்க வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் சூர்யகுமார் யாதவும் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இருவருமே 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹர்திக் 23 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் எடுத்தார்.
சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 48 ரன்கள் எடுத்து தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மும்பை அணி 20 ஓவர்களில் 217/2 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பையின் வெற்றி நடை தொடருமா?
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் கேப்டன் ரியான் பராக், மஹீஷ் தீக்ஷனா இருவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் இளம் தொடக்க வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே ரன்சேஸில் ரன் மழை பொழியும் என்று எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில் பும்ரா, போல்ட் உள்ளிட்ட அனுபவம் மிக்க பவுலர்கள் மும்பை அணிக்கு வலு சேர்க்கிறார்கள். மும்பை அணி இந்தப் போட்டியில் வென்றால், லீக் சுற்றில் தொடர்ந்து 6வது வெற்றியைப் பதிவு செய்யும். அத்துடன் புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.


