IPL 2023 Auction: கும்ப்ளே ஆலோசனைப்படி சீனியர் வீரரை ஏலத்தில் வாங்கி பிரச்னைக்கு தீர்வு கண்ட மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஸ்பின் பவுலிங் யூனிட் பலவீனமாக இருந்த நிலையில், சீனியர் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவை ஏலத்தில் எடுத்து ஸ்பின் பவுலிங்கை பலப்படுத்தியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் கொச்சியில் நடந்துவருகிறது. இந்த ஏலத்தில் சாம் கரன்(ரூ.18.5 கோடி), கேமரூன் க்ரீன் (ரூ.17.5 கோடி), பென் ஸ்டோக்ஸ்(ரூ.16.25 கோடி) ஆகிய வீரர்கள் அதிகமான தொகைக்கு விலைபோனார்கள்.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா, கைரன் பொல்லார்டு ஆகிய இருபெரும் ஆல்ரவுண்டர்கள் - மேட்ச் வின்னர்களை இழந்து திணறிய நிலையில், அந்த இடத்தை பூர்த்தி செய்ய, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை ரூ.17.5 கோடி என்ற பெரிய தொகை கொடுத்து எடுத்தது.
ஜஸ்ப்ரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய 2 மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர்களை அணியில் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, பேட்டிங், ஃபாஸ்ட் பவுலிங் ஆகிய இரண்டிலும் வலுவாக உள்ள நிலையில், ஸ்பின் பவுலிங்கில் தான் பலவீனமாக இருந்தது.
எனவே மும்பை இந்தியன்ஸ் அணி ஸ்பின் பவுலிங் யூனிட்டை வலுப்படுத்த அமித் மிஷ்ரா - பியூஷ் சாவ்லா ஆகிய 2 சீனியர் ஸ்பின்னர்களில் ஒருவரை எடுக்கலாம் என்று அனில் கும்ப்ளே அறிவுறுத்தியிருந்தார். அதேபோலவே சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னரான ஐபிஎல்லில் அதிக அனுபவம் வாய்ந்த பியூஷ் சாவ்லாவை ரூ.50 லட்சத்துக்கு எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஜெய் ரிச்சர்ட்ஸனை ரூ.1.5 கோடிக்கு எடுத்தது. உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் ஆடிவரும் விஷ்ணு வினோத் என்ற வீரரை ரூ.20 லட்சத்துக்கும், ஷாம்ஸ் முலானியை ரூ.20 லட்சத்துக்கும் எடுத்தது மும்பை அணி.