ஆர்சிபி அணியின் தொடக்க ஜோடி மற்றும் விராட் கோலியின் பேட்டிங் ஆர்டர் ஆகியவை குறித்து வாசிம் ஜாஃபர் கருத்து கூறியுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனிலும் வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது ஆர்சிபி அணி. ஆனால் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகிவிட்டதால், ஃபாஃப் டுப்ளெசிஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டுப்ளெசிஸின் கேப்டன்சியில் ஆர்சிபி அணி இந்த சீசனில் களமிறங்குகிறது ஆர்சிபி அணி. விராட் கோலி, முகமது சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய மூவரை மட்டுமே தக்கவைத்த ஆர்சிபி அணி, ஏலத்தில் டுப்ளெசிஸ், ஜோஷ் ஹேசில்வுட், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல் ஆகிய நல்ல வீரர்களை ஏலத்தில் எடுத்தது. அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரார், ஷாபாஸ் அகமது ஆகிய வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.
விராட் கோலி இந்த சீசனில் ஆர்சிபி அணியில் தொடக்க வீரராக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலியும் தொடக்க வீரராக இறங்கத்தான் ஆர்வம் காட்டுகிறார். ஆனால் ஃபாஃப் டுப்ளெசிஸுடன் விராட் கோலி தொடக்க வீரராக இறங்கக்கூடாது என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய வாசிம் ஜாஃபர், விராட் கோலி 3ம் வரிசையில் தான் ஆட வேண்டும். அவர் களத்தில் நிலைத்து நின்று இன்னிங்ஸை பில்ட் செய்து, செட்டில் ஆனபின்னர் அடித்து ஆடக்கூடிய வீரர். பவர்ப்ளேயில் ஆடுவது அவரது கேம் அல்ல. எனவே கோலி 3ம் வரிசையில் ஆட வேண்டும். ஃபாஃப் டுப்ளெசிஸும் கோலியும் ஒரே மாதிரியான வீரர்கள். எனவே டுப்ளெசிஸுடன் கோலி ஓபனிங்கில் இறங்கக்கூடாது. கோலி 3ம் வரிசையில் இறங்கவேண்டும். டுப்ளெசிஸுடன் அனுஜ் ராவத் தொடக்க வீரராக ஆட வேண்டும். அனுஜ் ராவத் உள்நாட்டு போட்டிகளில் நன்றாக ஆடியிருக்கிறார். எனவே அவர் தொடக்க வீரராக இறங்கலாம் என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
