ஐபிஎல்லை விட நாட்டுக்காக ஆடுவதுதான் முக்கியம் என வங்கதேச வீரர் டஸ்கின் அகமது எடுத்துள்ளார். டஸ்கின் அகமதுவை லக்னோ அணி ஒப்பந்தம் செய்ய முயன்ற நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது. 

ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்குகின்றன. 10 அணிகள் ஆடவுள்ளதால் இந்த சீசன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே, ஐபிஎல் அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்ட சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லை விட்டு விலகியுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியால் ரூ.7.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட், காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகினார். இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக வங்கதேச வீரர் டஸ்கின் அகமதுவை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்தது லக்னோ அணி.

ஆனால் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இடம்பெற்று ஆடிவரும் டஸ்கின் அகமதுவை ஐபிஎல்லில் ஆட அனுமதியளிக்க மறுத்துவிட்டது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் முடிந்ததும், சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக ஆடவுள்ளது வங்கதேச அணி. எனவே தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இருப்பதால், வங்கதேச அணிக்காக அவர் ஆடவேண்டும் என்ற காரணத்தால் அவரை ஐபிஎல்லில் ஆட அனுமதிக்க முடியாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துவிட்டது.

டஸ்கின் அகமதுவிடமும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட நிலையில், வங்கதேசத்திற்காக ஆடுவதே முக்கியம் என்று தெரிவித்துவிட்டதால், அவர் ஐபிஎல்லில் ஆடவில்லை. 

இரண்டே மாதங்களில் கோடிகளை சம்பாதிக்கலாம் என்பதால் வெளிநாட்டு வீரர்கள், தங்கள் சொந்த நாட்டு அணிக்கு ஆடுவதை விட ஐபிஎல்லில் ஆடவே முன்னுரிமை கொடுத்துவரும் நிலையில், டஸ்கின் அகமதுவின் முடிவு பாராட்டுக்குரியது.