என்னை பட்லரின் மனைவினு நெனச்சுட்டாங்க.. பரவாயில்ல இருந்துட்டு போகட்டும்..! RR வெளிநாட்டு வீரரின் மனைவி கலகல
தன்னை ஜோஸ் பட்லரின் மனைவி என்று நிறைய பேர் நினைத்து கொண்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடும் தென்னாப்பிரிக்க வீரர் ராசி வாண்டர்டசனின் மனைவி லாரா கூறியுள்ளார்.

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமாக விளையாடி பிளே ஆஃபிற்கு முன்னேறியது. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, எலிமினேட்டரில் ஜெயித்த ஆர்சிபி அணியுடன் 2வது தகுதிப்போட்டியில் இன்று மோதுகிறது.
இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேற முக்கிய காரணம், ஜோஸ் பட்லரின் அபார பேட்டிங். இந்த சீசனில் இதுவரை 15 போட்டிகளில் ஆடி 3 சதங்களுடன் 718 ரன்களை குவித்துள்ளார் பட்லர்.
பட்லர் பெரிய ஷாட்டுகளை ஆடும்போதும், சதம் அடிக்கும்போதும், ராசி வாண்டர் டசனின் மனைவி லாராவை கேமராமேன்கள் ஃபோக்கஸ் செய்து காட்டினர். இதையடுத்து அனைவரும் அவர் தான் பட்லரின் மனைவி என நினைத்துக்கொண்டனர்.
இதுகுறித்து அஷ்வின் மனைவி ப்ரீத்தி மற்றும் சாஹல் மனைவி தனஸ்ரீ ஆகியோருடனான உரையாடலில் கலகலப்பாக பேசியுள்ளார் வாண்டர் டசனின் மனைவி லாரா.
இதுகுறித்து பேசிய லாரா, அனைவரும் என்னை ஜோஸ் பட்லரின் மனைவி என நினைத்துக்கொண்டனர். அதற்கு காரணம், பட்லர் ஆடும்போது அடிக்கடி என்னை கேமராவில் காட்டியதுதான். நானும் தனஸ்ரீயும்(சாஹல் மனைவி) நன்றாக உற்சாகப்படுத்துவோம்; ஆட்டத்தை என்ஜாய் செய்து பார்ப்போம். அட்லர் சதமடிக்கும்போது நான் மகிழ்ச்சியாக அதை கொண்டாடியதை பார்த்து என்னை அவரது மனைவி என நினைத்துக்கொண்டனர்.
ராசி(வாண்டர் டசன்) இந்த சீசனில் நிறைய ஆடவில்லை. எனவே அவரது ஆட்டத்தை கொண்டாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக பட்லரின் ஆட்டத்தை என்ஜாய் செய்தேன். 15 ஃபோட்டோகிராஃபர்களில் யாரோ ஒருவர், பட்லர் நன்றாக ஆடும்போதெல்லாம் என்னை காட்டியிருக்கிறார். நான் ராசியின் மனைவி. பட்லரின் மனைவி அல்ல. ஆனால் இப்போதைக்கு இருந்துட்டு போகட்டும். பட்லருக்கு Cheer செய்கிறேன் என்று லாரா தெரிவித்துள்ளார்.