Asianet News TamilAsianet News Tamil

IPL 2022: மிகப்பெரிய முன்னாள் ஜாம்பவானை தலைமை பயிற்சியாளராக நியமித்த லக்னோ அணி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐபிஎல் 15வது சீசனில் புதிய அணியாக இணைந்துள்ள லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி ஃப்ளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

IPL 2022 Andy Flower appointed as head coach of Lucknow franchise
Author
Chennai, First Published Dec 17, 2021, 6:45 PM IST

ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 15வது சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைகின்றன.

எனவே அடுத்த சீசனிலிருந்து ஐபிஎல்லில் 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கியது. அகமதாபாத் அணியை சிவிசி கேபிடள் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ.5,625 கோடிக்கு வாங்கியது.

அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவிருப்பதால், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு (அதிகபட்சம் 4 வீரர்கள்) மற்ற வீரர்களை விடுவித்துள்ளன. ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா  ஏலத்திற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஏலத்திற்கு முன்பாக 2 புதிய அணிகளும் தலா 3 வீரர்களை வாங்கிக்கொள்ளலாம். அந்தவகையில், லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் சில பெரிய வீரர்களுக்கு வலைவிரித்துவருகின்றன.

ரூ.20 கோடிக்கு கேஎல் ராகுலை வாங்கி அவரையே கேப்டனாக நியமிக்கும் முயற்சியில் லக்னோ அணி உள்ளதாக தகவல் வெளியான நிலையில், லக்னோ அணி ஜிம்பாப்வே முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் கிரிக்கெட்டருமான ஆண்டி ஃப்ளவரை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளது.

1992ம் ஆண்டிலிருந்து 2003ம் ஆண்டுவரை ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய ஆண்டி ஃப்ளவர், அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். 63 சர்வதேச டெஸ்ட் மற்றும் 213 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள ஆண்டி ஃப்ளவர், பயிற்சியாளராகவும் நல்ல அனுபவம் கொண்டவர்.

2010ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ஆண்டி ஃப்ளவர் தான் பயிற்சியாளர். கரீபியன் பிரீமியர் லீக்கில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 

ஆண்டி ஃப்ளவர் மீது நம்பிக்கை வைத்து அவரை பயிற்சியாளராக நியமித்துள்ள லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ஃப்ளவர் சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  லக்னோ அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்பதற்கு பெருமை தெரிவித்துள்ளார் ஆண்டி ஃப்ளவர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios