ஐபிஎல்லில் 9வது அணியில் ஆடப்போகும் ஆரோன் ஃபின்ச், அதிக அணிகளில் ஆடிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். அதுகுறித்து ஆரோன் ஃபின்ச் கருத்து கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனும், அதிரடி தொடக்க வீரருமான ஆரோன் ஃபின்ச்சை ஐபிஎல் 15வது சீசனில் கேகேஆர் அணி எடுத்துள்ளது.
கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்த இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், ஐபிஎல்லில் இருந்து விலகியதால், அவருக்கு பதிலாக ஆரோன் ஃபின்ச்சை ஒப்பந்தம் செய்தது கேகேஆர் அணி. மெகா ஏலத்தில் ஆரோன் ஃபின்ச்சை எந்த அணியும் எடுக்க முன்வராததால் ஏலத்தில் அவர் விலைபோகவில்லை. அலெக்ஸ் ஹேல்ஸ் விலகியதையடுத்து, ஃபின்ச்சை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்தது.
ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆரோன் ஃபின்ச் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தானில் உள்ளார். பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி ஆடுகிறது. கடைசி டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி முடிவடைகிறது. அதன்பின்னர் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. அதற்காக ஃபின்ச் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
அதனால் ஐபிஎல்லில் முதல் சில போட்டிகளில் அவர் கேகேஆர் அணியுடன் இருக்கமாட்டார். பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டுதான் வருவார்.
ஐபிஎல்லில் 2010ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் ஆரோன் ஃபின்ச், எந்த அணியிலும் நிரந்தரமாக இருந்ததில்லை. 2010லிருந்து ஐபிஎல்லில் ஆடிவரும் ஃபின்ச்சுக்கு இப்போது ஆடப்போகும் கேகேஆர் அணி, 9வது அணி. இதற்கு முன் 8 அணிகளுக்காக ஆடியிருக்கிறார். ஐபிஎல்லில் அதிக அணிகளுக்காக ஆடிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆரோன் ஃபின்ச் ஆவார்.
ஆரோன் ஃபின்ச் ஆடிய ஐபிஎல் அணிகள்:
2010 - ராஜஸ்தான் ராயல்ஸ்
2011-2012 - டெல்லி டேர்டெவில்ஸ்
2013 - புனே வாரியர்ஸ் இந்தியா
2014 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
2015 - மும்பை இந்தியன்ஸ்
2016-2017 - குஜராத் லயன்ஸ்
2018 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
2020 - ஆர்சிபி
2022 - கேகேஆர்
ஐபிஎல்லில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளுக்காகவும் ஆடிவிட்ட ஆரோன் ஃபின்ச், 9வது அணிக்காக ஆடவுள்ள நிலையில், அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, ஒரேயொரு அணியின் ஜெர்சி மட்டும் தான் நான் இன்னும் அணியவில்லை. அது எந்த அணி என்று என்னால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றார் ஃபின்ச்.
ஃபின்ச் சிஎஸ்கே அணியில் மட்டும்தான் இன்னும் ஆடவில்லை.
