சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக யாரை இறக்கலாம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று புனேவில் நடக்கும் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அனியும் மோதுகின்றன.

டேவிட் வார்னர், ரஷீத் கான் ஆகிய பெரிய மேட்ச் வின்னர்களை எல்லாம் கழட்டிவிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இளம் வீரர்களை எடுத்து கேன் வில்லியம்சன் தலைமையில் இளம் அணியை கட்டமைத்துள்ளது. 

ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், உம்ரான் மாலிக், பிரியம் கர்க், கார்த்திக் தியாகி, வாஷிங்டன் சுந்தர் என இளம் வீரர்களை எடுத்து குவித்துள்ளது.

சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிகரமான தொடக்க வீரராக வார்னர் திகழ்ந்துவந்த நிலையில், அவரை கழட்டிவிட்ட சன்ரைசர்ஸ் அணி, இந்த சீசனில் யாரை ஓபனராக இறக்கும் என்ற கேள்வி எழுகிறது. ராகுல் திரிபாதி தொடக்க வீரராக ஆடுவார். அவருடன் தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் தொடக்க வீரராக இறக்கப்படலாம் அல்லது இளம் வீரர் அபிஷேக் ஷர்மா இறக்கப்படலாம். ஒருவேளை கேப்டன் கேன் வில்லியம்சனே ஓபனிங்கில் இறங்கக்கூட வாய்ப்புள்ளது.

ஆனால் வாஷிங்டன் சுந்தரை ஓபனிங்கில் இறக்க வேண்டும் என்று வித்தியாசமான ஆப்சனை கொடுத்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, மற்றவர்கள் யோசிக்காத ஒரு ஆப்சனை தருகிறேன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டையுமே வாஷிங்டன் சுந்தரை வைத்து தொடங்கலாம். ராகுல் திரிபாதியுடன் வாஷிங்டன் சுந்தர் தொடக்க வீரராக இறங்கலாம். ஓபனிங்கில் அவர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக இருப்பார். அவரை 6,7,8ம் வரிசைகளில் இறக்கி வீணடிக்கக்கூடாது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.