கேகேஆருக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பவுலர் டேனியல் சாம்ஸ் ஒரு ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கிய நிலையில், ஐபிஎல்லில் ஒரு ஓவரில் 35 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய 3 பவுலர்களை பார்ப்போம். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. புனேவில் நேற்று நடந்த போட்டியில் கேகேஆரும் மும்பை இந்தியன்ஸும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 161 ரன்கள் அடித்தது. 

162 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணி 15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் அடித்திருந்தது. 16வது ஓவரை வீசிய மும்பை இந்தியன்ஸ் பவுலர் டேனியல் சாம்ஸ் அந்த ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் பேட்டிங் ஆடிய பாட் கம்மின்ஸ் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை அடித்தார். ஒரு நோபால்; அந்த நோ பாலில் 2 ரன்கள் என்ற மொத்தம் 35 ரன்களை வழங்கினார் டேனியல் சாம்ஸ். அந்த ஓவரில் கம்மின்ஸின் காட்டடியால் அதே ஓவரிலேயே இலக்கை எட்டி கேகேஆர் அணி வெற்றியும் பெற்றது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் 35 அல்லது அதற்கு மேல் ரன்களை வாரி வழங்கியதில் டேனியல் சாம்ஸ் 3வது பவுலர். இதற்கு முன் 2 பவுலர்கள் ஒரு ஓவரில் 35 ரன்களுக்கு மேல் வழங்கியுள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

1. பிரசாந்த் பரமேஸ்வரன் 

ஐபிஎல்லில் ஒரு ஓவரில் 35 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய முதல் பவுலர் பிரசாந்த் பரமேஸ்வரன் தான். 2011 ஐபிஎல்லில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காக ஆடிய பிரசாந்த் பரமேஸ்வரன் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அவரது முதல் ஓவரிலேயே 37 ரன்களை வாரி வழங்கினார். 

பிரசாந்த் பரமேஸ்வரனின் அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த கெய்ல், 2வது பந்திலும் சிக்ஸர் அடித்தார்; அது நோ பாலும் கூட. நோ பாலுக்கு வீசப்பட்ட ரீ பாலில் ஒரு பவுண்டரி அடித்த கெய்ல், 3வது பந்திலும் பவுண்டரி அடித்தார். எனவே முதல் 3 பந்தில் 21 ரன்களை வழங்கினார். கடைசி 3 பந்தில் 2 சிக்ஸர் மற்றும் ஒருபவுண்டரி அடித்தார் கெய்ல். மொத்தமாக அந்த ஓவரில் மட்டும் 37 ரன்களை வழங்கினார் பிரசாந்த் பரமேஸ்வரன்.

2. ஹர்ஷல் படேல்

2021 ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் படேல், அந்த சீசனில் ஒரு மோசமான சாதனையையும் படைத்தார். சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 19வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் அந்த ஓவரில் 37 ரன்களை வாரி வழங்கினார். ஹர்ஷல் படேலின் அந்த ஓவரை எதிர்கொண்ட ஜடேஜா, முதல் 4 பந்திலும் 4 சிக்ஸர்கள் விளாசினார். அதில் 4வது பந்து நோ பால்; அந்த ரீ பாலில் 2 ரன் அடித்தார் ஜடேஜா. எனவே முதல் 4 பந்தில் 27 ரன்களை வழங்கிய ஹர்ஷல் படேல், கடைசி 2 பந்தில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் கொடுக்க, மொத்தமாக அந்த ஓவரில் 37 ரன்களை வழங்கினார்.

பிரசாந்த் பரமேஸ்வரன் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் தலா 37 ரன்கள் வழங்கிய நிலையில், டேனியல் சாம்ஸ் ஒரே ஓவரில் 35 ரன்கள் வழங்கி, இந்த விரும்பத்தகாத பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளார்.