உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றதால் பாகிஸ்தான் அணி வெளியேறியது. 

அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடக்கவுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், தனது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், மீண்டும் அந்த பதவிக்கு வர விரும்பவில்லை.

இதுகுறித்து பேசிய இன்சமாம் உல் ஹக், நான் ஏற்கனவே மூன்றாண்டுகள் தேர்வுக்குழு தலைவராக இருந்துவிட்டேன். டி20 உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023ல் ஒருநாள் உலக கோப்பை ஆகியவை நடக்கவுள்ளன. எனவே புதிய தேர்வுக்குழு தலைவரை நியமிக்க இதுவே சரியான தருணம். அதனால் பதவி நீட்டிப்பு பெற நான் விரும்பவில்லை. எனது முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எஹ்சான் மணியிடம் தெரிவித்துவிட்டேன் என்று இன்சமாம் தெரிவித்துள்ளார். 

இன்சமாம் உல் ஹக்கின் பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.