ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடக்கும் இறுதி போட்டியில் நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன.

ஐபிஎல்லில் தலா 3 முறை கோப்பையை வென்று சமபலம் வாய்ந்த வெற்றிகரமான அணிகளாக திகழும் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் நான்காவது முறையாக கோப்பையை வெல்ல இன்று பலப்பரீட்சை செய்கின்றன.

இந்த சீசனில் இதுவரை இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளிலுமே மும்பை இந்தியன்ஸ் அணி தான் வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி என்றாலே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே மூன்றுமுறை இறுதி போட்டியில் மோதிய அணிகள் என்பதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியுள்ளது. 

சிஎஸ்கேவிற்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி நல்ல ரெக்கார்டை வைத்துள்ளது. 2010, 2013, 2015 ஆகிய மூன்று சீசன்களிலும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் இறுதி போட்டியில் மோதியுள்ளன. இதில் 2010ம் ஆண்டு மட்டுமே சிஎஸ்கே வென்றது. அந்த போட்டியில் மும்பையின் கேப்டன் சச்சின். அதன்பின்னர் ரோஹித் கேப்டனான பிறகு இரு அணிகளும் மோதிய இரண்டு ஃபைனல்களிலுமே மும்பை அணிதான் வென்றது.

இன்றைய போட்டி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று உள்ளது. அதாவது மும்பை அணியும் சிஎஸ்கேவும் மோதிய 3 இறுதி போட்டிகளிலுமே முதல் பேட்டிங் ஆடிய அணிதான் வெற்றி பெற்றது. 2010 சீசனின் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே வென்று கோப்பையை கைப்பற்றியது. 2013, 2015 ஆகிய இரண்டு சீசன்களிலும் மும்பை அணி முதலில் பேட்டிங் ஆடியது; அந்த அணிதான் வெற்றி பெற்று கோப்பையையும் கைப்பற்றியது. 

அதேபோல் இன்றும் நடக்குமா..? டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யுமா? என்பதை பார்ப்போம். இந்த சீசனில் சிஎஸ்கே அணியே கூட பெரும்பாலும் இரண்டாவது பேட்டிங் ஆடி இலக்கை விரட்டத்தான் விரும்பியது. இந்நிலையில் இன்று எந்த அணி டாஸ் வெல்கிறது? என்ன முடிவெடுக்கிறது? என்பதை இரவு 7 மணிவரை பொறுத்திருந்து பார்ப்போம்.