உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக, முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி, ஆரம்பகால வீராங்கனைகள் முன்பதிவில்லாத ரயில்களில் பயணித்தது போன்ற கடினமான சூழல்களை நினைவுகூர்ந்தார்.
மும்பையில் உள்ள டி.ஒய. பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கும் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி, ஆரம்ப காலத்தில் வீராங்கனைகள் சந்தித்த போராட்டங்களையும், இன்னல்களையும் நினைவுகூர்ந்துள்ளார்.
ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் ஏழு முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. தற்போது லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது. களத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொண்டதுடன், களத்திற்கு வெளியிலும் இந்திய அணி வீராங்கனைகள் விமர்சனங்களை எதிர்கொண்டனர். தொடர்ச்சியாக மூன்று தோல்விகளுக்குப் பிறகு கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இருப்பினும், அணி ஒற்றுமையுடன் இருந்து, மீண்டும் எழுந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆரம்ப கால சவால்கள்
இந்நிலையில், இறுதிப் போட்டிக்கு முன்னதாகப் பேசிய முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி, பெண்கள் கிரிக்கெட்டுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து (பிசிசிஐ) ஆதரவு சிறிதும் இல்லாத கடினமான நாட்களைப் பற்றிப் பேசினார். 1976-இல் அறிமுகமாகி 1991 வரை விளையாடிய இந்திய மகளிர் அணியின் முதல் கேப்டன் சாந்தா ரங்கசாமி.
அவர், அந்த நாட்களில் மகளிர் அணி முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்ததாகவும், போட்டிகளுக்காகப் பயணம் செய்யும்போது பெரும்பாலும் தங்கும் விடுதியில் தரையில் படுத்துத் தூங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் எங்கள் சொந்தப் படுக்கைகளையும் மற்ற அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்துச் செல்ல சிரமப்பட்டோம். கிரிக்கெட் கிட்டை முதுகுப் பையில் சுமந்துகொண்டே, இன்னொரு கையில் சூட்கேஸை வைத்திருப்போம்," என பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் சாந்தா ரங்கசாமி நினைவுகூர்ந்தார்.
மாற்றங்களும் வெற்றியும்
அவர் மேலும் கூறுகையில், "தற்போதைய வீராங்கனைகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கஷ்டப்பட்டு உழைத்ததற்கு இப்போது கண்கூடாக பலன் தெரிகிறது. வீராங்கனைகள், பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் அனைத்து முயற்சிகளும் மகளிர் கிரிக்கெட்டின் இந்த வெற்றிக்குப் பெரிதும் பங்களித்துள்ளன." என்றார்.
சமீபத்தில், பிசிசிஐ மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் ஆண்களுக்கு இணையான ஊதியத்தை அறிவித்தது. வருடாந்திர ஒப்பந்தங்களில் இன்னும் வேறுபாடுகள் இருந்தாலும், இன்றைய வீராங்கனைகள் முன்னெப்போதையும் விட மிகவும் சிறந்த ஆதரவைப் பெறுகின்றனர்.
"நாங்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த அடித்தளம் இப்போது பலன் அளிக்கிறது," என்று சாந்தா பெருமையுடன் கூறியுள்ளார். மேலும், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணி இன்று கோப்பையை வென்றால், இந்தியாவில் கிரிக்கெட் விளையாட வரும் பெண்களின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை கூறியுள்ளார்.
ஜெய் ஷாவுக்குப் பாராட்டு
2023ஆம் ஆண்டில் மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடங்கப்பட்டதும் மகளிர் கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வந்துள்ளதாகவும் சாந்தா குறிப்பிட்டார். இதற்காக, முன்னாள் பிசிசிஐ செயலாளரும் தற்போதைய ஐசிசி தலைவருமான ஜெய் ஷாவைப் பாராட்டினார்.
"ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக இருந்தபோது, மகளிர் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்த பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். மகளிர் கிரிக்கெட்டை ஆதரித்த குழுவில் நான் இருந்ததால், அந்த முயற்சிகள் பெரும் பலனைத் தந்துள்ளன என்று உறுதியாகச் சொல்கிறேன்," என்று சாந்தா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இதற்கு முன்னர் 2005 மற்றும் 2017 என இரண்டு முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டியுள்ளது, இரண்டு முறையும் மிதாலி ராஜ் அணியை வழிநடத்தினார். இன்று ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா வென்றால், அது இந்தியாவில் பெண்கள் விளையாட்டுத் துறையில் ஒரு திருப்புமுனையாக அமையும்.
