WTC 2025 பைனலில் விளையாடாவிட்டாலும் இந்தியாவுக்கு கோடிக்கணக்கில் பரிசுத்தொகை கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.
WTC Final 2025 Prize Money: டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (ஜூன் 11) முதல் 15 வரை நடைபெற உள்ளது. 2021–2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதே வேளையில் தென்னாப்பிரிக்கா அணி இப்போது முதன் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுகிறது.
இந்திய அணிக்கு கோடிகளில் பணம் கிடைக்கும்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC 2025) இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை என்றாலும், இந்திய அணிக்கு கோடிகளில் பணம் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்த மூன்றாவது இடத்தைப் பிடித்தால் 1,440,000 டாலர்கள் கிடைக்கும். இது இந்திய பண மதிப்பில் தோராயமாக ரூ.12.32 கோடி.
WTC இறுதிப் போட்டியில் வெற்றி அணிக்கு எவ்வளவு கிடைக்கும்?
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறும் WTC இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி 3.6 மில்லியன் டாலர் பரிசுத்தொகை பெறும். இது கடந்த இரண்டு இறுதிப் போட்டிகளில் வென்ற பிறகு நியூசிலாந்து (2021) மற்றும் ஆஸ்திரேலியா (2023) சம்பாதித்த தொகையை விட இரண்டு மடங்கு அதிகம். WTCஇறுதிப் போட்டியில் தோற்கும் அணி 2.1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை பெறும். இந்த முறை இறுதிப் போட்டியில் தோற்கும் அணி முந்தைய சாம்பியனை விட அதிக பணம் சம்பாதிக்கும்.
WTC 2025 பைனலில் பரிசுத்தொகை அதிகம்
ஏனெனில் கடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் வென்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா 1.6 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை வென்றன. இந்த முறை பைனலில் தோற்கும் அணிக்கு இதைவிட அதிகமாக (2.1 மில்லியன் டாலர்) கிடைக்கும். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்தியா 8,00,000 டாலர்களை பரிசுத்தொகையாக பெற்றது குறிப்பிடத்தக்கது.


