உலக கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடிவருகிறது. வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 

பர்மிங்காமில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 314 ரன்களை குவித்தது. 315 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியை 286 ரன்களுக்கு சுருட்டி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. 

இந்த போட்டியில் வங்கதேச அணியின் பேட்டிங்கின் போது ஷமி வீசிய 11வது ஓவரின் இரண்டாவது பந்து சௌமியா சர்க்காரின் கால்காப்பில் பட்டது. அதற்கு பவுலர் ஷமி, கேப்டன் விராட் கோலி ஆகியோர் அப்பீல் செய்தனர். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இந்திய அணி வழக்கமாக ரிவியூ எடுப்பதென்றால் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்டுத்தான் எடுக்கும். கேப்டன் கோலி, தோனியின் ஆலோசனையை மீறி செயல்படமாட்டார். 

ஆனால் இந்த சம்பவம் நடந்த நேரத்தில் விக்கெட் கீப்பர் தோனி இல்லை. தோனி அந்த சமயத்தில் டிரெஸிங் ரூம் சென்றுவிட்டதால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இருந்தார். ஒன்றிரண்டு ஓவர்கள் தான் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்தார். அந்த கேப்பில் இந்த சம்பவம் நடந்தது. எனினும் ரிஷப்பிடம் ஒரு சம்பிரதாயத்துக்கு அவரது கருத்தை கேட்டுவிட்டு கோலி உடனடியாக அப்பீல் செய்தார். அதற்கு அப்பீல் செய்ய வேண்டும் என்று கோலி ஏற்கனவே மனதளவில் தயாராகிவிட்டுத்தான் ரிஷப்பிடம் கேட்டார். அந்த பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்வது போல தெரிந்தது. எனவே அது கள நடுவரின் முடிவிற்குத்தான் விடப்படும் என்பதால் தோனி ரிவியூ எடுக்க வேண்டாம் என்றுதான் கூறியிருப்பார். அவரது பேச்சை கோலி மீறியும் இருக்கமாட்டார். 

ஆனால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இருந்ததால், அந்த ரிவியூ எடுக்கப்பட்டது. அந்த எல்பிடபிள்யூ ரிப்ளேவில் பார்த்து முடிவு செய்வதற்கே மிகவும் கடினமாக இருந்தது. பந்து பேட் மற்றும் கால்காப்பு ஆகிய இரண்டுக்கும் இடையே சென்றதால் அது முதலில் பேட்டில் பட்டதா கால்காப்பில் பட்டதா என்பதை கண்டுபிடிக்க கடினமாக இருந்தது. அதனால் பந்து ஸ்டம்பில் பட்டதா என்பதை பார்ப்பதற்கான பால் டிரேக்கிங்கே செய்யாமல், கள நடுவரின் முடிவே இறுதியானது என்று தேர்டு அம்பயர் சொல்லிவிட்டார். 

பால் ட்ரேக்கிங்கே செய்யாததால் அந்த ரிவியூவை இந்திய அணி இழந்துவிட்டது. ரிவியூவை இழந்த கடுப்பில் கள நடுவரிடம் பால் ட்ரேக்கிங் செய்யாதது குறித்தும் ரிவியூ குறித்தும் வாக்குவாதம் செய்தார் கேப்டன் கோலி. தோனி இப்படி போயிட்டு அப்படி வருவதற்குள் ரிவியூ போச்சு...