நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி  10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட நிலையில், இந்திய அணி இரண்டு துறைகளிலுமே சொதப்பியது. 

முதல் போட்டியில் பேட்டிங்கில் மயன்க் அகர்வாலும் பவுலிங்கில் இஷாந்த் சர்மாவும் மட்டுமே சிறப்பாக ஆடினர். பிரித்வி ஷா இரண்டு இன்னிங்ஸ்களிலும் சரியாக ஆடவில்லை. கோலி, புஜாரா ஆகிய சீனியர் வீரர்களும் படுமோசமாக சொதப்பினர். ஹனுமா விஹாரி, ரஹானே ஆகியோரும் அணிக்கு பிரயோஜனமான இன்னிங்ஸை ஆடவில்லை. ஃபாஸ்ட் பவுலர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில், ஸ்பின் பவுலர் அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் பேட்டிங் சரியாக ஆடவில்லை. 

எனவே நாளை தொடங்கவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. 2வது போட்டிக்கான இந்திய அணியில் ஒன்றிரண்டு மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இஷாந்த் சர்மா காயத்தால் நாளை தொடங்கும் போட்டியில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக உமேஷ் ஆடலாம். இதைத்தவிர ஒன்றிரண்டு மாற்றங்கள் செய்யப்படும். 

அஷ்வின் - ஜடேஜா, பிரித்வி ஷா - கில், ரிஷப் பண்ட் - சஹா ஆகிய காம்பினேஷன்களில் யார் ஆடுவார் என்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, பிரித்வி ஷா ஆடுவதை உறுதி செய்தார். ஜடேஜா - அஷ்வின் குறித்து பேசிய சாஸ்திரி, அஷ்வின் - ஜடேஜா இருவரில் யார் ஆடுவார் என்பது நாளைதான் முடிவு செய்யப்படும். அஷ்வின் உலகத்தரம் வாய்ந்த பவுலர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. கண்டிஷனுக்கு ஏற்ப சரியான வீரர்களை தேர்வு செய்வதில் உறுதியாக இருக்கிறோம் என்று சாஸ்திரி தெரிவித்தார். 

Also Read - சச்சின் vs லாரா.. இருவரில் யாருக்கு பந்துவீசுவது ரொம்ப கஷ்டம்..? மெக்ராத்தின் நெற்றியடி பதில்

ரிஷப் பண்ட் - சஹா குறித்து பேசிய சாஸ்திரி, இந்தியாவில் ஆடும்போதுதான் சஹா. வெளிநாடுகளில் ஆடும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பர். இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக சுழலும் என்பதால் தரமான விக்கெட் கீப்பர் தேவை. எனவே இந்தியாவில் சஹா ஆடுவார். வெளிநாடுகளில் ஸ்பின் பவுலிங்கில் பெரிய தாக்கம் இருக்காது. எனவே பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ரிஷப் பண்ட் தான் ஆடுவார். பின்வரிசையில் பேட்டிங்கில் அவர் வலுசேர்ப்பார் என்று சாஸ்திரி தெரிவித்தார்.