இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் ஓய்வை பற்றி சற்றும் யோசிக்காத தோனி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலிருந்து அவராக ஒதுங்கினார்.

அதன்பின்னர் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரிலிருந்து ஒதுக்கப்பட்டார். டி20 உலக கோப்பை இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள நிலையில், ரிஷப் பண்ட் இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக உருவாக்கப்பட்டுவருகிறார். 

எனவே தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. அதை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தே இடையில் ஒருமுறை மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

அதனால் தோனிக்கு ஃபேர்வெல் போட்டி மட்டும் ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு தொடருக்குமான இந்திய அணி அறிவிக்கப்படும் முன், தோனியுடனான தனது ஏதாவது ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை கேப்டன் கோலி டுவீட் செய்வதால், தோனி அணியில் இடம்பெறுவாரோ என்ற சந்தேகம் எழுவதுடன் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. 

தோனி மீண்டும் அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்பதற்கு, அணி நிர்வாகத்தின் சார்பிலிருந்து மழுப்பலாகவே பதிலளிக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல்லில் தோனி ஆடுவதை பொறுத்துத்தான் எதையும் கூறமுடியும் என ஏற்கனவே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்த நிலையில், இப்போது மீண்டும் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தோனி குறித்து பேசியுள்ள சாஸ்திரி, தோனியுடன் நான் பேசினேன். அது எங்களுக்கு இடையிலான விஷயம். அவர் டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளார். ஆனால் ஐபிஎல்லில் கண்டிப்பாக ஆடுவார் என்பதால், அவர் அதில் அபாரமாக ஆடும்பட்சத்தில் டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற அவரும் போட்டியாளராக இருப்பார். ஆனால் அவர், தன்னை அணியில் திணித்துக்கொள்ள விரும்பவில்லை என்று சாஸ்திரி தெரிவித்துள்ளார்.