இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி வெற்றி பெற்றது. 

இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது. மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளுமே உள்ளன. 

நாக்பூரில் நடக்க உள்ள இரண்டாவது போட்டி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. நாக்பூரில் இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடியபோதெல்லாம் இந்திய அணி ரன்களை வாரி குவித்துள்ளது. 

தோனி, ரோஹித், கோலி ஆகிய மூவருமே நாக்பூரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக தோனி மற்றும் ரோஹித்தின் கோட்டையாக திகழ்கிறது நாக்பூர். இருவரும் ரன்களை தாறுமாறாக குவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒரு அணியாகவும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மாபெரும் வெற்றிகளை நாக்பூரில் பெற்றுள்ளது. 

2009:

2009ம் ஆண்டு நடந்த தொடரில் நாக்பூரில் 2வது ஒருநாள் போட்டி நடந்தது. அந்த போட்டியில் தோனியின் அபார சதத்தால் இந்திய அணி 354 ரன்களை குவித்தது. தோனி 124 ரன்களை குவித்தார். அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 255 ரன்களுக்கே சுருட்டி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது இந்திய அணி. 

2013:

அதன்பிறகு 2013ம் ஆண்டு இரு அணிகளுக்கும் இடையே நாக்பூரில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஜார்ஜ் பெய்லி மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோரின் அபார சதத்தால் 350 ரன்களை குவித்தது. ரோஹித், கோலி, தவான் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்த இலக்கை கடைசி ஓவரில் எட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. 

2017:

2017ம் ஆண்டு நாக்பூரில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 243 ரன்கள் என்ற இலக்கை ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால் 43வது ஓவரிலேயே எட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. இவ்வாறு நாக்பூரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த போட்டிகளில் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றுள்ளது. 

அதிலும் ரோஹித், தோனி ஆகியோரின் கோட்டையாக நாக்பூர் திகழ்வதால் இன்றைய போட்டி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.