ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக கடந்த சில தொடர்களில் ஆடாததால், அவருக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக ஷிவம் துபே அணியில் இணைந்து, அசத்தலாக ஆடியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்தினார் ஷிவம் துபே. பவுலிங்கில் வேகம் இல்லாததால் பவர் ஹிட்டர்களான வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் அவரது பவுலிங்கை அடித்து ஆடினர். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காத ஷிவம் துபேவை தனது பேட்டிங் ஆர்டரில் இறக்கிவிட்டார் கேப்டன் கோலி. ஆரம்பத்தில் சற்று திணறிய துபே, அதன்பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினார். 4 சிக்ஸர்களுடன் 30 பந்தில் 54 ரன்களை குவித்தார். முதல் டி20 இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அசத்தினார் துபே. 

பவுலிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டார். மோசம் என்று சொல்ல முடியாது. ஃபீல்டிங்கிலும் மிகச்சிறப்பாகவே செயல்படுகிறார். இந்நிலையில், ஷிவம் துபேவை மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்று புகழ்ந்துள்ள பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், துபே இந்திய அணியின் மிகச்சிறந்த வளம் என்றும், மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக ஒரு ரவுண்டு வருவார் எனவும் புகழ்ந்துள்ளார். 

துபே குறித்து பேசிய பரத் அருண், துபே இந்திய அணிக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஒவ்வொரு போட்டியிலும் கூடுதல் நம்பிக்கையை பெற்று மேம்படுகிறார். மும்பையில் நடந்த கடைசி டி20 போட்டியில் முதல் ஓவரில் ரன்களை வாரி வழங்கினார். ஆனால் அந்த ஓவரில் செய்த தவறுகளை அறிந்துகொண்டு அடுத்தடுத்த ஓவர்களை நன்றாக வீசினார். அவர் முதல் ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிவிட்டார் என்பதற்காக, அவரை ஒதுக்காமல், அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் பந்தை வழங்கினார் கேப்டன் கோலி. அந்த நம்பிக்கையை வீணடிக்காமல், அதன்பின்னர் சிறப்பாக வீசி அசத்தினார் துபே. 

இந்திய அணிக்கு கிடைத்த மிக அபாரமான திறமை துபே. ஒவ்வொரு போட்டியிலும் கூடுதல் நம்பிக்கையை பெற்று மேம்படும் துபே, மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வருவார் என்று பரத் அருண் புகழ்ந்துள்ளார்.