வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த பும்ரா, காயத்தால் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஆடவில்லை. 

பும்ராவிற்கு பதிலாக டெஸ்ட்டில் உமேஷ் யாதவும் டி20 போட்டிகளில் தீபக் சாஹரும் அணியில் இருந்தனர். பும்ரா இல்லாதபோதும் இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் சிறப்பாகவே பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் மீது ஆதிக்கம் செலுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். 

இந்திய அணி முதன்முறையாக வங்கதேசத்துக்கு எதிராக பிங்க் பந்தில் ஆடிய வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் பும்ராவால் ஆடமுடியாமல் போனது. 

இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டுள்ள பும்ரா பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார். காயத்திலிருந்து மீண்டு வந்ததுமே, அதிவேகத்தில் வீசி ஸ்டம்பை உடைத்துள்ளார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் பும்ரா. இதன்மூலம் தான் உடற்தகுதி பெற்றுவிட்டதை உணர்த்தியுள்ளார் பும்ரா.

ஆனாலும் இந்திய அணி அடுத்ததாக ஆடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் பும்ரா இல்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. அந்த அணிகளில் பும்ரா இல்லை. அந்த தொடர் முடிந்து அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணியில் கண்டிப்பாக பும்ரா இருப்பார்.