இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேடின் அதிரடியான பேட்டிங்கால் தான் ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 186 ரன்கள் அடித்தது. தொடக்கம் முதலே அடித்து ஆடிய மேத்யூ வேட் 53 பந்தில் 80 ரன்கள் அடித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். நடராஜன் வீசிய 11வது ஓவரிலேயே மேத்யூ வேட் ஆட்டமிழந்திருக்க வேண்டியவர்; ஆனால் தப்பிவிட்டார்.

நடராஜன் வீசிய 11வது ஓவரின் ஒரு பந்து மேத்யூ வேடின் கால்காப்பில் பட்டது. அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் நடராஜனும் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலும் அது அவுட் என்று உறுதியாக நம்பியதால், கேப்டன் கோலியிடம் ரிவியூ எடுக்க வலியுறுத்தினர். பவுண்டரி லைனில் இருந்த கோலி, நடராஜன் மற்றும் ராகுலுடன் பேசி ரிவியூ எடுப்பதற்குள், ரிவியூ எடுப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது. அதைக்கவனிக்காமல் கோலி டி.ஆர்.எஸ் எடுத்தார். ஆனால் டி.ஆர்.எஸ் எடுப்பதற்கான நேரம் முடிந்துவிட்டதை கவனித்த பேட்ஸ்மேன் மேத்யூ வேட், அம்பயர்களிடம் ரிவியூ எடுக்க அனுமதிக்கக்கூடாது என்று அம்பயர்களிடம் வலியுறுத்தினார்.

மேத்யூ வேடின் கருத்தை ஏற்றுக்கொண்ட அம்பயர்கள் ரிவியூ எடுக்க முடியாது; நேரம் முடிந்துவிட்டது என்று கோலியிடம் கூற, அதிருப்தியடைந்த கோலி, அம்பயர்களிடம் முறையிட்டார். ஆனாலும் பயனில்லை. அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட மேத்யூ வேட், மேலும் கூடுதலாக 7 ஓவர்கள் பேட்டிங் ஆடி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தினார் மேத்யூ வேட். மேத்யூ வேடின் அதிரடி இன்னிங்ஸ் தான் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கே காரணமாக அமைந்தது. ஆட்டத்தின் முடிவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவமாக அது அமைந்தது.