சவுரவ் கங்குலி, தோனி ஆகியோரின் வரிசையில் கோலியும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை செவ்வனே செய்துவருகிறார். அவர்களை போலவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பும் ஆதரவும் அளித்து அடுத்த தலைமுறை கிரிக்கெட்டை மேலும் வலுவாக்க கேப்டன் கோலி உழைத்துவருகிறார். 

விராட் கோலியின் கேப்டன்சியில் அறிமுகமான வீரர்களில் முக்கியமானவர் மயன்க் அகர்வால். முதல் தர கிரிக்கெட், லிஸ்ட் ஏ போட்டிகள், விஜய் ஹசாரே, தியோதர் டிராபி என அனைத்துவிதமான உள்நாட்டு போட்டிகளிலும் மிகச்சிறப்பாக ஆடி ஏகப்பட்ட ரன்களை குவித்த மயன்க் அகர்வாலுக்கு, அவரது திறமையை போதுமான அளவிற்கு அதிகமாக நிரூபித்த போதிலும் இந்திய அணியில் அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்திய அணியில் ஆடுவதற்கு அழைக்கப்படும் அந்த தருணத்திற்காக காத்திருந்த மயன்க் அகர்வாலுக்கு, அப்படியொரு அழைப்பு 2018ம் ஆண்டு வந்தது. 2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் மயன்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மயன்க் அகர்வாலுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அசத்தினார் மயன்க் அகர்வால். அதன்பின்னர் அந்த தொடரில் எஞ்சிய இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால், அதன்பின்னர் கடந்த ஆண்டில்  தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடித்துவிட்டார் மயன்க் அகர்வால். 

இதுவரை மயன்க் அகர்வால், இந்திய அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களுடன் 872 ரன்கள் அடித்துள்ளார். 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாக திகழும் வீரர்களில் ஒருவரான மயன்க் அகர்வாலுடன் ஆன்லைனில் உரையாடிய கேப்டன் விராட் கோலி, அவரிடம் பிடித்த விஷயம் என்னவென்று தெரிவித்துள்ளதுடன், ஹனுமா விஹாரியையும் பாராட்டியுள்ளார். 

மயன்க் அகர்வாலிடம் பேசிய கேப்டன் கோலி, நான் உன்னை முன்பே ஆர்சிபியில் பார்த்திருக்கிறேன். அப்போதே, சர்வதேச பவுலர்களின் பவுலிங்கிற்கு எல்லாம் கொஞ்சம்கூட பயப்படாமல் துணிச்சலாக ஆடுவாய். முதல் தர கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடினாய். நீ அடித்த ரன்களை விட உன்னுடைய கேரக்டர் தான் எனக்கு ரொம்ப பிடித்தது. உன்னுடைய பயமற்ற துணிச்சலான ஆட்டம் எனக்கு நன்றாக தெரியும்.

ஒரு போட்டியையும் சூழலையும் ஒரு வீரர் எப்படி அணுகுகிறார் என்பதே முக்கியம். அந்தவகையில், நீ தொடக்க வீரராக இறங்கியபோது, மற்றொரு தொடக்க வீரராக ஹனுமா விஹாரியை இறக்கலாம் என்று நினைத்து அவரிடம் கேட்டபோது, உடனே சரி என்றார். அணிக்காக அப்படித்தான் எந்த ரோலையும் பொறுப்பையும் ஏற்று செயல்பட தயாராக இருக்க வேண்டும். அது எனக்கு ரொம்ப பிடித்தது என்றார் கேப்டன் கோலி.