ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு உலக கோப்பை நடத்தப்பட்டுவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் உலக கோப்பை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், முதன்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. அண்மையில் முடிந்த ஆஷஸ் தொடர் முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நடக்கும் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தான். 

ஒவ்வொரு அணியுமே உள்நாட்டில் மூன்று தொடர்களிலும் வெளிநாட்டில் மூன்று தொடர்களிலும் ஆடும். இறுதியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் மோதும். இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸில் நடக்கும். 

அந்த வகையில், ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் மொத்தமாக 120 புள்ளிகள். அந்த தொடரில் எத்தனை போட்டிகள் இருக்கிறதோ, அவற்றிற்கு 120 புள்ளிகளிலிருந்து பாயிண்ட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும். அதாவது 2 போட்டிகள் கொண்ட தொடர் என்றால், ஒரு வெற்றிக்கு 60 புள்ளிகள், மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என்றால் ஒரு வெற்றிக்கு 40 புள்ளிகள், 5 போட்டிகள் கொண்ட தொடர் என்றால் ஒரு வெற்றிக்கு 24 புள்ளிகள். 

வெற்றி அடையும் அணிக்கான பாயிண்ட் = ( 120/அந்த தொடரின் போட்டிகளின் எண்ணிக்கை).

இந்த பாயிண்ட்ஸ் சிஸ்டம் அதிருப்தியளிக்கக்கூடியதுதான். ஏனெனில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகள் சொந்த மண்ணில், 2 போட்டிகள் கொண்ட தொடரில் மொக்கை அணியை வீழ்த்தினால் ஒரு வெற்றிக்கு 60 புள்ளிகள். அதேநேரத்தில் வெளிநாட்டில் 5 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில், ஒரு அணி கஷ்டப்பட்டு போராடி வென்றால், அதற்கு வெறும் 24 புள்ளிகள் தான்.

தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இந்திய மண்ணில் இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவது மிகவும் கடினம். எனவே ஒருவேளை தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியை ஒரு போட்டியில் வீழ்த்தினாலும், 3 போட்டிகள் கொண்ட தொடர் என்பதால், தென்னாப்பிரிக்க அணிக்கு 40 புள்ளிகள் கிடைக்கும். இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம் என்றபோதிலும், தென்னாப்பிரிக்கா வென்றாலும் 40 புள்ளிகள் தான் கிடைக்கும். சொந்த மண்ணில் ஆடும் இந்திய அணி அசால்ட்டாக வெற்றி பெற்றுவிடும். ஆனால் இந்திய அணிக்கும் 40 புள்ளிகள். 

இந்த பாயிண்ட்ஸ் சிஸ்டம் பலருக்கும் அதிருப்தியளிக்கும் நிலையில், இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, என்னை கேட்டால் வெளிநாட்டு தொடர்களில் ஒரு போட்டியில் வென்றால் டபுள் பாயிண்ட்ஸ் வழங்கலாம். அடுத்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இது நடைமுறைப்படுத்தப்படும் என நினைப்பதாக கோலி தெரிவித்துள்ளார்.