இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் பிரைம் ஸ்பின்னர்களாக கடந்த 2 ஆண்டுகளாக இருந்துவந்த குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி அண்மைக்காலமாக டி20 அணியிலிருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறது. 

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தயாரிப்பு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலிருந்தே தொடங்கிவிட்டது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் குல்தீப், சாஹல் ஆகிய இருவருமே இல்லை. வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், ஜடேஜா, க்ருணல் பாண்டியா ஆகியோர் ஸ்பின்னர்களாக இடம்பெற்றிருந்தனர். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. இந்த தொடரிலும் வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர் ஆகியோரே இடம்பெற்றுள்ளனர். எனவே டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் குல்தீப்புக்கும் சாஹலுக்கும் இடமில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 

கேப்டன் கோலியின் ஆஸ்தான ஸ்பின்னர்களாக அறியப்பட்ட குல்தீப், சாஹல் ஆகிய இருவரும் தொடர்ச்சியாக டி20 அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்து கேப்டன் கோலி விளக்கமளித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய கேப்டன் கோலி, அணியில் பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் விதமாகவே குல்தீப்பும் சாஹலும் புறக்கணிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டு போட்டிகளிலும் ஐபிஎல்லிலும் சிறப்பாக ஆடிவரும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக குல்தீப், சாஹல் நீக்கப்பட்டனர். ஒரே அணி காம்பினேஷனுடன் ஆடமுடியாது. சிறந்த காம்பினேஷனை கண்டறிய, இளம் வீரர்களுக்கு இதுமாதிரி வாய்ப்புகள் வழங்க வேண்டும். 

மற்ற அணிகளில் 9 மற்றும் 10ம் வரிசை வீரர் கூட பேட்டிங் நன்றாக ஆடுவார் என்றால், நம்மால் முடியாதா..? எனவே பேட்டிங்கும் ஆட தெரிந்த ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணி நிர்வாகம் எடுக்கும் எல்லா முடிவுகளுமே வலுவான அணி காம்பினேஷனை உருவாக்கத்தான் என்று கேப்டன் கோலி விளக்கமளித்தார். 

வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, க்ருணல் பாண்டியா ஆகிய மூவருமே பேட்டிங் நன்றாக ஆடுவார்கள். ராகுல் சாஹரும் ஓரளவிற்கு பேட்டிங் ஆடுவார். எனவே இவர்களே 4 ஸ்பின்னர்களாகிவிட்டனர். ஸ்பின்னிலும் இவர்கள் அசத்தக்கூடியவர்களே. எனவே பேட்டிங் ஆட தெரியாத குல்தீப்பையும் சாஹலையும் அணியில் வைத்து என்ன செய்வது? எனவே அணி நிர்வாகத்தின் இந்த முடிவு சரியானதுதான்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.