இந்தியா வரும் வீரர்கள் டிராபியோடு திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக செல்ல ஏற்பாடு; தாரை தப்பட்டை எல்லாம் ரெடியா?
பார்படாஸில் டி20 உலகக் கோப்பை டிராபியை வென்ற இந்திய வீரர்கள் நாளை நாடு திரும்பும் நிலையில், திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பார்படாஸில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை வென்று சரித்திரத்தில் இடம் பிடித்தது. இந்தியாவிற்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவு ஊழியர்கள், தென் ஆப்பிரிக்கா வீரர்களின் குடும்பத்தினர் என்று அனைவரும் நாடு திரும்பிவிட்டனர்.
ஆனால், இந்திய அணி வீரர்களால் இதுவரையில் நாடு திரும்பமுடியவில்லை. டிராபி வென்ற மகிழ்ச்சியை கொண்டாடிய நிலையில் பார்படாஸில் பெரில் சூறாவளி புயல் தாக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், போக்குவரத்து சேவையும் தடை செய்யப்பட்டது. ஹோட்டல்களில் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இது போன்ற பல பிரச்சனைகளை இந்திய அணி வீரர்கள் எதிர்கொண்டனர்.
கிட்டத்தட்ட 4 நாட்கள் ஆன நிலையிலும் இதுவரையில் பார்படாஸில் நிலைமை சரியாகவில்லை. இந்த நிலையில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியிருப்பதாவது: சூறாவளி காரணமாக பார்படாஸில் கடந்த சில நாட்களாக சிக்கித் தவித்த இந்திய வீரர்கள் புதன் கிழமை மாலை (உள்ளூர் நேரம்) டெல்லி திரும்ப இருப்பதாக கூறினார்.
மேலும், இன்று மாலை பார்படாஸிலிருந்து டெல்லிக்கு பறக்கிறது. நாளை அதிகாலை அல்லது காலையில் டெல்லியை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரில் சூறாவளி காரணமாக இந்திய வீரர்கள் பார்படாஸிலேயே சிக்கியுள்ளனர். இந்திய வீரர்கள் பாதுகாப்பான முறையில் வீடு திரும்ப பிசிசிஐ அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்திய வீரர்கள் உடன் இணைந்து 22 விளையாட்டு பத்திரிக்கையாளர்களையும் அழைத்து வரவும் பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இந்தியா திரும்பும் இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற இருக்கின்றனர். அதன் பிறகு திறந்தவெளி பேருந்தில் மும்பை முழுவதும் டிராபியுடன் ஊர்வலமாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெரில் சூறாவளி பார்படாஸில் சில சேதங்களை ஏற்படுத்தியது. சமீபத்திய அறிக்கையின்படி இது மெதுவாக ஜமைக்காவை நோக்கி செல்கிறது மற்றும் ஹைட்டி மற்றும் டொமினிகன் குடியரசு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும், இன்றும், நாளையும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.