உலக கோப்பைக்கு முன், இந்திய அணியின் 4ம் வரிசை வீரருக்கான பரிசோதனை பட்டியலில் மனீஷ் பாண்டேவும் இருந்தார். ஆனால் மனீஷ் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளாததால் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஆனால் உள்நாட்டு போட்டிகளிலும் ஐபிஎல்லிலும் அபாரமாக ஆடியதால், உலக கோப்பைக்கு பின்னர் மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் மனீஷ் பாண்டே எடுக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்கான அணியில் கூட மனீஷ் பாண்டே இடம்பெற்றுள்ளார். 

இதற்கிடையே சையத் முஷ்டாக் அலி தொடரில் கர்நாடக அணியின் கேப்டனாக இருந்து அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை கர்நாடக அணி வென்று கொடுத்தார். அண்மையில் நடந்த விஜய் ஹசாரே தொடரையும் மனீஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணிதான் வென்றது. 

சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதி போட்டி சூரத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய மனீஷ் பாண்டே 60 ரன்களை குவித்தார். தமிழ்நாடு அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மனீஷ் தலைமையிலான கர்நாடக அணி கோப்பையை வென்றது. 

நேற்றிரவு சூரத்தில் சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற கையோடு மும்பைக்கு சென்றார் மனீஷ் பாண்டே. மும்பையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மனீஷ் பாண்டேவின் திருமணம் நடைபெறவுள்ளது. தமிழில் சித்தார்த் நடித்த உதயம் என்.எச்.4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அஷ்ரிதா ஷெட்டியை மனீஷ் பாண்டே இன்று மணக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. 

இன்று மும்பையில் நடக்கும் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன், குறிப்பிட்ட சில கிரிக்கெட் வீரர்கள் மட்டும் கலந்துகொள்ளவுள்ளனர்.