அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷெகம் இன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே தெய்வீக அருளால் ஆசீர்வதிக்கப்படட்டும் என்று அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடே கொண்டாடும் ஒரு திருவிழா இன்று அயோத்தியில் நடக்கிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரானா பிரதிஷ்டா கும்பாபிஷேகம் இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக ஆன்மீக பெரியோர்கள், கோடீஸ்வரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் என்று அனைவரும் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்த மகா கும்பாஷேகத்தின் முக்கிய சடங்குகளை வாரணாசியின் பிரதான பூசாரி லக்ஷ்மி காந்த் தீட்சித் செய்ய உள்ளார். அயோத்தி நகரமே வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர் அலங்காரங்களால் ஜொலிக்கிறது. மங்கல இசையுடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே ஆகியோர் உள்பட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் இந்திய அணி வீரர் அஜிங்கியா ரஹானே அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து ரஹானே கூறியிருப்பதாவது: ஜெய் ஸ்ரீராம் இன்றும், என்றும் தெய்வீக அருளால் ஆசீர்வதிக்கப்படட்டும் என்று கூறியுள்ளார். இதே போன்று தென் ஆப்பிரிக்கா வீரரும், ராமரின் தீவிர பக்தருமான கேசவ் மகாராஜ் வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். அயோத்தியில் இன்று ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தென் ஆப்பிரிக்காவில் உள்ள எனது இந்திய சமூகத்திற்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் அமைதி, நல்லிணக்கம், ஆன்மீக ஞானம் கிடைக்கட்டும். ஜெய் ஸ்ரீராம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
