பிங்க் பந்தில் முதன்முறையாக ஆடும் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள், வங்கதேச அணியின் வீரர்களை கொத்தாக சரித்தனர்.
இந்திய அணி முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை வங்கதேச அணிக்கு எதிராக ஆடிவருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் பிங்க் பந்தில் சிறப்பாக வீசிவருகின்றனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக ஷத்மான் இஸ்லாமும் இம்ருல் கைஸும் களமிறங்கினர். இருவரும் விக்கெட்டை இழந்துவிடாமல் நிதானமாக தொடங்கி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என நினைத்தனர்.
ஆனால் இம்ருல் கைஸை 4 ரன்களில் வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. அதன்பின்னர் கேப்டன் மோமினுல் ஹக் மற்றும் முகமது மிதுன் ஆகிய இருவரும் உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் டக் அவுட்டாகி வெளியேறினர். வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரமான முஷ்ஃபிகுர் ரஹீமும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஷமியின் பந்தில் டக் அவுட்டானார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் ஆடிக்கொண்டிருந்தார். 29 ரன்கள் அடித்திருந்த அவரை உமேஷ் யாதவ் வீழ்த்தினார். மற்றொரு அனுபவ வீரரான மஹ்மதுல்லாவும் 6 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து லிட்டன் தாஸுடன் நயீம் ஹசன் ஜோடி சேர்ந்தார்.
ஷமி வீசிய பவுன்ஸர் ஒன்று லிட்டன் தாஸின் தலையை பதம்பார்த்தது. அதனால் அவருக்கு தலையில் வலி ஏற்பட்டது. ஹெல்மெட்டில் அந்த பவுன்ஸர் கடுமையாக தாக்க, அவரை பரிசோதிக்க வேண்டியிருந்ததால், அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளை வரை 21.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி 73 ரன்கள் அடித்துள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 22, 2019, 3:36 PM IST