இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கியது. 

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வென்று 1-0 என ஏற்கனவே இந்திய அணி முன்னிலை வகித்துவரும் நிலையில், இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. மேலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால், ஏற்கனவே 160 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, இந்த போட்டியிலும் வென்று 200 புள்ளிகளை பெற்று தொடர்ந்து புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் உள்ளது. 

அதேநேரத்தில் முதல் போட்டியில் தோற்ற தென்னாப்பிரிக்க அணி, இந்த போட்டியில் வெற்றி பெறும் தீவிரத்தில் உள்ளது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்கும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியே டாஸ் வென்றார். முதல் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி, இந்த போட்டியிலும் டாஸ் வென்றார். 

டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். 8வது பேட்ஸ்மேன் வரை நன்றாக பேட்டிங் ஆடுவதால் பேட்டிங் டெப்த் நன்றாகவுள்ளதால், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை வலுப்படுத்தும் விதமாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கேப்டன் கோலி தெரிவித்தார். 

ரோஹித், மயன்க், புஜாரா, கோலி, ரஹானே, சஹா, அஷ்வின், ஜடேஜா ஆகிய 8 வீரர்களும் பேட்டிங் ஆடுவார்கள் என்பதால் ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். புனே ஆடுகளம் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஷ்வின், இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ். 

தென்னாப்பிரிக்க அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டேன் பீட் நீக்கப்பட்டும் நோர்ட்ஜே சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர், மார்க்ரம், டி ப்ருய்ன், டுப்ளெசிஸ்(கேப்டன்), பவுமா, டி காக்(விக்கெட் கீப்பர்), முத்துசாமி, ஃபிளாண்டர், கேசவ் மஹாராஜ், ரபாடா, நோர்ட்ஜே.