INDW vs AUSW: டையில் முடிந்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் ஸ்மிரிதி மந்தனாவின் அதிரடியால் இந்தியா வெற்றி
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணி 187 ரன்கள் அடிக்க, ஆட்டம் டையில் முடிந்தது. சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் இந்த தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய மகளிர் அணி:
ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தேவிகா வைத்யா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, ராதா யாதவ், அஞ்சலி சர்வானி, மேக்னா சிங், ரேணுகா தாகூர் சிங்.
BAN vs IND: முதல் டெஸ்ட் போட்டியில் ஆட இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு..? உத்தேச ஆடும் லெவன்
ஆஸ்திரேலிய மகளிர் அணி:
பெத் மூனி, அலைசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தாலியா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி, லிட்ச்ஃபீல்ட், அனாபெல் சதெர்லேண்ட், ஹீதர் கிரஹாம், அலானா கிங், கிம் கார்த், மெகான் ஸ்கட்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலைசா ஹீலி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் அபாரமாக ஆடி 89 ரன்களை குவித்த மற்றொரு தொடக்க வீராங்கனையான பெத் மூனி, இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகளின் பவுலிங்கை அடித்து நொறுக்கி அரைசதம் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய மெக்ராத்தும் அவருடன் இணைந்து அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார்.
பெத் மூனி மற்றும் மெக்ராத் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆட, கடைசி வரை இவர்களின் விக்கெட்டை இந்திய அணியால் பிரிக்க முடியவில்லை. பெத் மூனி 54 பந்தில் 13 பவுண்டரிகளுடன் 82 ரன்களையும், மெக்ராத் 51 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 70 ரன்களையும் குவிக்க, 20 ஓவரில் 187 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.
188 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா அதிரடியாக ஆடி 23 பந்தில் 34 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மந்தமாக பேட்டிங் அடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 22 பந்தில் 21 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஸ்மிரிதி மந்தனா 49 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்தார். கிட்டத்தட்ட வெற்றியை நோக்கி இந்திய அணியை அழைத்துச்சென்ற ஸ்மிரிதி மந்தனா 17வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ரிச்சா கோஷ் மட்டும் தனியாக போராடினார். அதிரடியாக ஆடி 13 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் ரிச்சா கோஷ் ஒரு ரன் அடித்தார். 2வது பந்தில் பவுண்டரி அடித்த தேவிகா வைத்யா, 3வது பந்தில் சிங்கிள் எடுத்தார். 4வது பந்தில் ரிச்சா 2 ரன் மட்டுமே அடிக்க, கடைசி 2 பந்தில் 6 ரன் தேவைப்பட்டது. லாங் ஆஃபில் வீசப்பட்ட யார்க்கரை பெரிய ஷாட் ஆடமுடியாமல் சிங்கிள் மட்டுமே அடித்தார் ரிச்சா. கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட, தேவிகா வைத்யா பவுண்டரி அடிக்க பரபரப்பான போட்டி டையில் முடிந்தது.
ஒரே இரட்டை சத இன்னிங்ஸில் சீனியர் வீரரின் கெரியரை காலி செய்த இஷான் கிஷன்
இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரில் இந்திய அணி சார்பில் ஸ்மிரிதி மந்தனா மற்றும் ரிச்சா கோஷ் ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ரிச்சா கோஷ் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். 3வது பந்தில் ஹர்மன்ப்ரீத் கௌர் சிங்கிள் எடுக்க, 3 பந்தில் 7 ரன் கிடைத்தது. 4வது பந்தில் பவுண்டரியும், 5வது பந்தில் சிக்சரும், கடைசி பந்தில் 3 ரன்களும் அடித்த ஸ்மிரிதி மந்தனா 3 பந்தில் 13 ரன்களை குவிக்க, இந்திய அணி சூப்பர் ஓவரில் 20 ரன்களை விளாசியது.
சூப்பர் ஓவரில் 21 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் மட்டுமே தோல்வியை தழுவியது. சூப்பர் ஓவரில் ஸ்மிரிதி மந்தனாவின் அதிரடியான பேட்டிங்கால் இந்தியா வெற்றி பெற்று டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.