2025 ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஷஃபாலி வர்மா இந்திய அணியில் இடம்பெறவில்லை.

2025 Women World Cup Indian Team Squad: 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெற உள்ளது. முதல் போட்டி செப்டம்பர் 30 அன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூரில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 5 அன்று இலங்கையின் கொழும்புவில் நடைபெறும். இந்த நிலையில் 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மூத்த மகளிர் அணி தேர்வுக்குழு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை மும்பையில் அறிவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் மூத்த வீராங்கனை ஷஃபாலி வர்மா அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ஷஃபாலி வர்மா நீக்கப்பட்டது ஏன்?

அக்டோபர் 2024 இல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசியாக விளையாடியதிலிருந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடாத ஷஃபாலி, சமீபத்தில் முடிவடைந்த இந்தியா ஏ ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரேணுகா சிங் தாக்கூர் அணிக்கு திரும்பினார்

ஆனாலும் அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அதே வேளையில் டிசம்பர் 2024 முதல் முதுகு மன அழுத்த எலும்பு முறிவு காரணமாக ஓரங்கட்டப்பட்டிருந்த ரேணுகா சிங் தாக்கூர் தேசிய அணிக்கு திரும்பினார். ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து ஃபார்மில் இருக்கும் பிரதிகா ராவல் தொடக்க வீராங்கனையாக களமிறங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), க்ராந்தி கவுட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்) மற்றும் ஸ்னேஹ் ராணா.