இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று கான்பெராவில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க வீரர் மயன்க் அகர்வால் நீக்கப்பட்டு, இளம் வீரர் ஷுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்பின்னர் சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஃபாஸ்ட் பவுலர்கள் ஷமி மற்றும் சைனி நீக்கப்பட்டு, ஷர்துல் தாகூர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலரும் யார்க்கர் மன்னனுமான டி.நடராஜனும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐபிஎல்லில் சிறப்பாக பந்துவீசி, தனது துல்லியமான யார்க்கர்களின் மூலம் முன்னாள், இந்நாள் ஜாம்பவான்கள் பலரையும் கவர்ந்து இந்திய அணியிலும் இடம்பிடித்த நடராஜன், இந்திய அணியில் இடம்பிடித்த முதல் தொடரிலேயே ஆடும் லெவனிலும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்திய அணி:

ஷிகர் தவான், ஷுப்மன் கில், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, டி.நடராஜன்.

ஆஸ்திரேலிய அணியில் வார்னர் காயத்தால் ஆடாததால், தொடக்க வீரர் வார்னருக்கு பதிலாக மார்னஸ் லபுஷேன் தொடக்க வீரராக களமிறங்குகிறார். ஃபாஸ்ட் பவுலர்கள் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க்கிற்கு ஓய்வளிக்கப்பட்டு, சீன் அபாட் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவிற்கு பதிலாக அஷ்டன் அகர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், அஷ்டன் அகர், சீன் அபாட், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.