Asianet News TamilAsianet News Tamil

India vs New Zealand கடைசி டி20யில் இந்தியா அபார வெற்றி! நியூசி.,யை ஒயிட்வாஷ் செய்து டி20தொடரை வென்றது இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை 3-0 என வென்றது.
 

india whitewashed new zealand in t20 series
Author
Kolkata, First Published Nov 21, 2021, 10:31 PM IST

இந்தியா - நியூசிலாந்து  இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. கேஎல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷனும், ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹலும் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அக்ஸர் படேல், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து அணியில் டிம் சௌதி ஆடாததால் மிட்செல் சாண்ட்னெர் கேப்டன்சி செய்தார். சௌதிக்கு பதிலாக லாக்கி ஃபெர்குசன் அணியில் சேர்க்கப்பட்டார்.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் ஃபிலிப்ஸ், டிம் சேஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன், ஆடம் மில்னே, டிரெண்ட் போல்ட்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக தொடங்கினாலும் கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 29 ரன்களுக்கு இஷான் கிஷன் ஆட்டமிழக்க, அதே ஓவரில் சூர்யகுமார் யாதவும் டக் அவுட்டானார்.

ரிஷப் பண்ட்டும் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கேப்டன் ரோஹித் சர்மாவும் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 103 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்ட நிலையில், அதை ஷ்ரேயாஸ் ஐயரும் வெங்கடேஷ் ஐயரும் இணைந்து செய்தனர். ஆனால் வெங்கடேஷ் ஐயர் 20 ரன்னில் ஆட்டமிழக்க, அதற்கடுத்த 17வது ஓவரிலேயே ஷ்ரேயாஸ் ஐயரும் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தபோது இந்திய அணியின் ஸ்கோர் 140 ரன்கள். 2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், 180 ரன்களாவது அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருந்த நிலையில், ஹர்ஷல் படேல் 11 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 18 ரன்கள் அடித்தார்.

ஆடம் மில்னே வீசிய கடைசி ஓவரில் தீபக் சாஹர் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி 8 பந்தில் 21 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 184 ரன்களை குவித்தது இந்திய அணி.

இதையடுத்து 185 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டிலை 2வது ஓவரின் கடைசி பந்தில் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பந்துவீசிவிட்டு, பின்பக்கமாக திரும்பி ஓடிவந்து பிடிப்பது கடினம் என்பதால் அந்த கேட்ச்சை தீபக் சாஹர் தவறவிட்டார். அதை மிட் ஆன் திசையில் நின்ற சாஹல் பிடித்திருக்கலாம். ஆனால் தீபக் சாஹர் பிடிக்க முயன்றதால் சாஹல் பின்வாங்கினார்.

மார்டின் கப்டிலுக்கு கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்டாலும், 3வது ஓவரை வீசிய அக்ஸர் படேல், அந்த ஓவரில் டேரைல் மிட்செல் (5) மற்றும் மார்க் சாப்மேன் (0) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். க்ளென் ஃபிலிப்ஸையும் டக் அவுட்டாக்கினார் அக்ஸர் படேல்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த மார்டின் கப்டில் 51 ரன்னில் சாஹலின் பந்தில் ஆட்டமிழந்தார். அத்துடன் போட்டியின் முடிவு தெரியவந்தது. ஜிம்மி நீஷம் (3), மிட்செல் சாண்ட்னெர் (2), ஆடம் மில்னே (7) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, டிம் சேஃபெர்ட் 17 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இதையடுத்து 111 ரன்களுக்கு ஆல் அவுட்டான நியூசிலாந்து அணி,  73  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 3 டி20 போட்டிகளிலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது இந்திய அணி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios