இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், கடைசி போட்டியிலும் வென்று, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணியும் ஒரேயொரு வெற்றியை பெறும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களமிறங்கின. 

இந்த போட்டியில் விராட் கோலி ஆடாததால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார்.. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் ஆடியது. கேஎல் ராகுலும் சஞ்சு சாம்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சஞ்சு சாம்சன் இந்த போட்டியிலும் சரியாக ஆடாமல் 2 ரன்னில் வெளியேறினார். 

இதையடுத்து ராகுலுடன் ரோஹித் ஜோடி சேர்ந்தார். ரோஹித் சர்மா நிதானமாக ஆட, ராகுல் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து வெளுத்து வாங்கினார். ஆரம்பத்தில் அமைதிகாத்து, பந்துக்கு நிகராக ரன் எடுத்த ரோஹித் சர்மா, சாண்ட்னெர் வீசிய பத்தாவது ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசினார். அதற்கடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். ரோஹித் சர்மா அதிரடியை தொடங்கிய மாத்திரத்தில் ராகுல் 33 பந்தில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ரோஹித்துடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர், ஷாட்டுகள் சரியாக கனெக்ட் ஆகாமல் ரன் எடுக்க முடியாமல் திணறினார். அதனால் அதிகமான பந்துகள் வீணாகின. இதையடுத்து அழுத்தம் அதிகரித்தது. அதேவேளையில் நன்றாக செட்டில் ஆகியிருந்த ரோஹித் சர்மா காலில் ஏற்பட்ட காயத்தால் 60 ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி சென்றார். 

இதையடுத்து களத்திற்கு வந்த ஷிவம் துபே இந்த போட்டியிலும் சொதப்பினார். அவர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, கடைசி வரை பெரிய ஷாட்டுகளை அடிக்க முடியாமல் பந்துகளை அடிக்காமல் வீணடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 31 பந்தில் வெறும் 33 ரன்கள் மட்டுமே அடித்தார். மனீஷ் பாண்டே வெறும் 4 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 11 ரன்களை எடுத்ததால் இந்திய அணி 20 ஓவரில் 163 ரன்களை எட்டியது. 

164 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டில் மற்றும் காலின் முன்ரோ ஆகிய இருவரும் முதல் மூன்று ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர். கப்டில் வெறும் 2 ரன்கல் மட்டுமே ஆட்டமிழந்தார். முன்ரோ 15 ரன்கள் மட்டுமே அடித்தார். 

அதன்பின்னர் டாம் ப்ரூஸ் டக் அவுட்டானார். டிம் சேஃபெர்ட்டும் ரோஸ் டெய்லரும் இணைந்து அபாரமாக ஆடினர். ஷிவம் துபே வீசிய 10வது ஓவரில் இருவருமே தலா 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தனர். எனவே அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக 32 ரன்கள் குவிக்கப்பட்டது. 30 பந்தில் 50 ரன்கள் அடித்த சேஃபெர்ட் சைனியின் பந்தில் 13வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் டேரைல் மிட்செல், மிட்செல் சாண்ட்னெர், குஜ்ஜெலின் என ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் டெய்லர் களத்தில் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 53 ரன்களில் சைனியின் பந்தில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் போட்டி இந்தியாவிற்கு சாதகமானது. நியூசிலாந்து அணி 19வது ஓவரின் இரண்டாவது பந்தில் 9வது விக்கெட்டாக டிம் சௌதியின் விக்கெட்டை இழந்தது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாகூர் வீசிய அந்த ஓவரில் இஷ் சோதி 2 சிக்ஸர்களை விளாசினார். ஆனாலும் அந்த அணியால் 156 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதையடுத்து இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாகவும் கேஎல் ராகுல் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

நியூசிலாந்தில் முதன்முறையாக டி20 தொடரை வென்ற இந்திய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது.