வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பொல்லார்டு தன்னை கொம்பு சீவிவிட்ட சம்பவம் குறித்து பேசியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்திய அணியின் 1000வது சர்வதேச ஒருநாள் போட்டி இது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 176 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து 177 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி 28 ஓவர்களில் இலக்கை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 60 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய அவர் 51 பந்தில் 60 ரன்கள் அடித்தார். கேப்டன் கோலி 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டுமொரு முறை ஏமாற்றினார். இஷான் கிஷன் 28 ரன்னிலும், ரிஷப் பண்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 116 ரன்களுக்கே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட, அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் அவர்களது உள்நாட்டு கிரிக்கெட் அனுபவத்தை பயன்படுத்தி, கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்துக்கொடுக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து, விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை முடித்துவைத்தனர். சூர்யகுமார் யாதவ் 34 ரன்களும் தீபக் ஹூடா 26 ரன்களும் அடித்து கடைசிவரை களத்தில் நின்றனர்.

இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவின் மும்பை இந்தியன்ஸ் நண்பரும், வெஸ்ட் இண்டீஸ் கேப்டனுமான பொல்லார்டு, சூர்யகுமாரை எப்படி உசுப்பேற்றிவிட்டார் என்பது பற்றி சூர்யகுமாரே தெரிவித்திருக்கிறார்.
சூர்யகுமார் ஃப்ளிக் ஷாட் அருமையாக ஆடக்கூடியவர். ஐபிஎல்லில் ஏகப்பட்ட ஃப்ளிக் ஷாட் ஆடி பார்த்திருக்கிறோம். எனவேஅதை சுட்டிக்காட்டி, அதுமாதிரி ஏன் ஆடவில்லை என பொல்லார்டு கேட்டிருக்கிறார். ஆனால் பொல்லார்டு உசுப்பேற்றிவிடுகிறார் என்பதை உணர்ந்த சூர்யகுமார் யாதவ் சுதாரிப்பாக, அவர் விரித்த வலையில் சிக்காமல் தப்பிவிட்டார்.
போட்டிக்கு பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், ஆட்டத்தின்போது பொல்லார்டு என்னிடம் வந்து பேசினார். மிட்விக்கெட் திசை ஓபனாக இருக்கிறது. ஐபிஎல்லில் நிறைய ஃப்ளிக் ஷாட் ஆடுவாயே.. அதுமாதிரி ஏன் ஆடவில்லை என என்னிடம் கேட்டார். ஆனால் அது வேற சூழல், இது வேற சூழல் என்பதை உணர்ந்து ஆடினேன் என்றார் சூர்யகுமார் யாதவ்.
