விராட்கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பதால், இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் மொஹாலியில் 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க பிசிசிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இந்தியா - இலங்கை இடையேயான டி20 தொடரை இந்திய அணி 3-0 என ஒயிட்வாஷ் செய்து வென்றது. அதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. வரும் 4ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் தொடங்கி நடக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் 12ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது.

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடும் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி, இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடக்கும் டெஸ்ட். அதுமட்டுமல்லாது இது விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி.

இந்திய அணியின் மேட்ச் வின்னரும், ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவரும், சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான விராட் கோலி, 99 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7962 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, கடந்த ஆண்டுகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் திணறிவருகிறார்.

அண்மைக்காலங்களில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில், ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே செல்லும் பந்துகளை விரட்டிச்சென்று அடித்து ஆட முயன்று தொடர்ச்சியாக ஆட்டமிழந்துவருகிறார். அந்த ஒரு தவறை திருத்திக்கொண்டால் டெஸ்ட்டில் அவரது 28வது சதம் வந்துவிடும்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே கோலியிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் கிடைக்கவில்லை. எனவே இலங்கைக்கு எதிரான தொடரில் விராட் கோலியிடமிருந்து பெரிய ஸ்கோர் எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் மொஹாலியில் வரும் 4ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டி கோலியின் 100வது டெஸ்ட் என்பதால், அவரது ஸ்பெஷலான போட்டியிலிருந்து ஸ்பெஷலான நாக் எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என நம்பலாம். மேலும் அவர் நன்றாக ஆடினால் அது இந்திய அணியின் வெற்றிக்கும் உதவும்.

கோலியின் 100வது டெஸ்ட் போட்டி நடக்கும் மொஹாலியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பதால் 50 சதவிகித ரசிகர்களாவது அனுமதிக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்த நிலையில், 50 சதவிகித பார்வையாளர்களை மொஹாலி டெஸ்ட்டில் அனுமதிக்க பிசிசிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே விராட் கோலி அவரது 100வது டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் முன்பாக ஆடவுள்ளார்.