உலக கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான இன்றைய போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது.

இந்திய அணி ஆடிய முதல் 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்றது. அதேபோலவே நியூசிலாந்து ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை தோல்வியையே தழுவாத இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவதால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

போட்டி நடக்க இருந்த நாட்டிங்காமில் மழை பெய்தது. அதனால் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவது ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் மழை வந்ததால் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் டாஸ் தள்ளி போடப்பட்டது. மைதானத்தை ஆய்வு செய்யும் நேரம் ஒவ்வொரு ஒரு மணி நேரமாக ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தது.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி, இரவு 7.30 மணி வரை மழை பெய்ததால் கைவிடப்பட்டது. போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதையடுத்து 7 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி முதலிடத்திலும் இந்திய அணி மூன்றாமிடத்திலும் நீடிக்கிறது. போட்டி கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த உலக கோப்பையில் இந்த போட்டியுடன் சேர்த்து 3 போட்டிகள் டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டன.